துறையூர் அருகே அடிப்படை வசதியில்லாத பெருமாள்மலை கோயில்

துறையூர், செப்.5: துறையூர் அருகேயுள்ள பெருமாள் மலைக்கோயில் எவ்வித அடிப்படை வசதியில்லாமல் இருப்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.துறையூர் அருகேயுள்ள பெருமாள் மலை தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமையும் பிரசன்ன வெங்கடஜலபதி, தேவி, பூதேவி உற்சவர்களை வணங்குவதற்கு பல்லாயிரக்கானக்கான பக்தர்கள் பல்வேறு கிராமங்களில் இருந்து குடும்பசகிதமாக வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்திவிட்டு செல்வார்கள். பெருமாள்மலை சுமார் 1,500 அடி உயரம் கொண்டது. 1,560 படிகள் கொண்ட இந்த படியில் மலையின் உச்சிக்கு நடந்தே சென்று தரிசனம் செய்து வருவது இப்பகுதி மக்களின் நேர்த்திக்கடன் ஆகும். மேலும் மக்களுக்கு ஏதுவாக சென்று வருவதற்கு வாடகை வேன், கார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மலையில் இருந்து சரிந்து சாலையில் விழுந்துள்ள கற்களால் வாகனங்கள் சென்றுவர இடையூறாக இருக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையில் கிடக்கும் கற்களை அகற்றி போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

Advertising
Advertising

பெருமாள்மலை அடிவாரத்தில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டு மக்கள் பயன்பட்டில் இல்லாமல் பூட்டியே கிடக்கின்றன. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டால் தண்ணீர் பற்றாக்குறையால் பூட்டி வைத்துள்ளோம் என கூறுகின்றனர். இதுபோல் மலையின் உச்சியில் கோயில் அருகே கட்டப்பட்டிருக்கும் கழிவறை செயல்பாட்டில் இல்லாமல் சிதலடைந்து கிடக்கின்றன. இது குறித்து பலமுறை அறநிலையத்துறையில் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. வரும் பக்தர்களுக்கு குடிநீர், சாலை, கழிவறை உள்ளிட்ட வசதிகள் கூட இல்லாமல் இருப்பது இந்த பெருமாள்மலைகோயில் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும் அப்படியே விட்டுவிட்டது சமூக ஆர்வலர்களையும், பொதுமக்களையும் வேதனை அடைய செய்துள்ளது.இக்கோயிலுக்கு தினமும் சுமார் ஐம்பதிலிருந்து, நூறு பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். புரட்டாசி மாதம் சனிக்கிழமைக்கு சில நாட்களே உள்ளன. எனவே மாவட்ட கலெக்டர் பெருமாள்மலைக்கோயிலை பார்வையிட்டு குடிநீர் இணைப்புகள் சரி செய்து குடிநீர் வழங்கவும், சாலைகள், கழிவறைகளை சீரமைத்து தர வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: