×

உயர்நீதிமன்றம் தடை விதித்தும் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை

அருப்புக்கோட்டை, செப். 5: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கஞ்சநாயக்கன்பட்டி, ஜெயநகர் உள்ளன. இங்கு தனிநபர்கள் ஆழ்துளை கிணறுகளை அமைத்து, தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.  இதனால், கிராம குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த அழகர்சாமி என்பவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார். மனுவை விசாரித்த நீதிபதி பட்டா நிலங்களில் நீர் உறிஞ்சி வணிக நோக்கில் விற்க கடந்த ஜூலை மாதம் தடை உத்தரவு பிறப்பித்தார். உத்தரவை மீறும் பட்சத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் எடுப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். மேலும், ஊராட்சி தனி அலுவலர் கிராமத்தில் எச்சரிக்கை பதாகைகளை வைத்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, ‘கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் தனிநபர்களுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து வணிக நோக்கத்துடன் நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு டிராக்டர் மற்றும் மினி வண்டிகள் மூலம், தண்ணீர் எடுப்பதை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. எனவே, நீதிமன்ற உத்தரவை மதித்து நிலத்தடி நீர் எடுப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும். இதை மீறி நிலத்தடி நீரை உறிஞ்சுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி தினசரி 28க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.  இதை ஆய்வு செய்ய வேண்டிய ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கஞ்சநாயக்கன்பட்டி, ஜெயநகர் பகுதி மக்கள் தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பட்டா நிலத்தில் நிலத்தடி நீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை