பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைத்த பொதுமக்கள்

புதுச்சேரி,  செப். 5: புதுவையில் வீடுகளில் பொதுமக்கள் வைத்து வழிபட்ட விநாயகர்  சிலைகளை நேற்று கடற்கரைக்கு எடுத்து கடலில் கரைத்தனர். இதையொட்டி அங்கு  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விநாயகர் சதுர்த்தி விழா 2ம்தேதி  கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல வடிவங்
களில் விநாயகர் சிலைகள் விற்கப்பட்ட  நிலையில் அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி வீடு அலுவலகங்களில் வைத்து  வழிபட்டனர்.
சாரத்தில் இந்து முன்னணி சார்பில் 21 அடி உயர பிரமாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதேபோல் கோயில்கள், முக்கிய  சந்திப்புகள், குடியிருப்பு பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட இடங்களில்  விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இவை நாளை (6ம்தேதி) சாரத்தில் இருந்து ஊர்வலமாக கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு கடலில் கிரேன் மூலம்  கரைக்கப்படுகிறது. இதனிடையே பொதுமக்கள் தங்களது வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை 3 அல்லது 5ம் நாளில் கடலில் கரைப்பது வழக்கம்.

இவ்வாறு  வீடுகளில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகளை அருகில் பல்வேறு அமைப்புகள்  சார்பில் வைக்கப்பட்ட பெரிய அளவிலான விநாயகர் சிலை பந்தலுக்கு எடுத்துச் சென்று வைப்பது வழக்கம். நேற்று பந்தலில் சிலைகள் வைக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் அதை  தங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்ற பொதுமக்கள் 3ம் நாளான நேற்று கடலில்  கரைத்தனர். இதனால் புதுவை கடற்கரை சாலை, வம்பாகீரப்பாளையம், கடற்கரை  உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையொட்டி  புதுச்சேரி கடற்கரை சாலையில் மணல் கொட்டப்பட்டு தற்காலிக மேடுகள்  அமைக்கப்பட்டிருந்தன. மேலும் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும்  போடப்பட்டிருந்தது. காலாப்பட்டு:  விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான தந்திராயன் குப்பம் கடற்கரையில் விநாயகர் சிலை கரைக்க இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டக்குப்பம், சின்ன கோட்டக்குப்பம், பெரிய கோட்டக்குப்பம், வானூர், வளவனூர், லாஸ்பேட்டை, கண்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்கள் மூலம் தந்திராயன்குப்பம் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு அனைத்து சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஒவ்வொரு விநாயகர் சிலையாக படகு மூலம் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. மேலும், தந்திராயன்குப்பம் மீனவர் பஞ்சாயத்து சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியையொட்டி கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல் பொம்மையார் பாளையம் கடற்கரையில் பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 50க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டது. புதுச்சேரி காலாப்பட்டு மற்றும் தமிழக பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக காலாப்பட்டு செல்லியம்மன் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அனைத்து சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டது.

Tags :
× RELATED அரசு மகளிர் மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி திறப்பு