கழிவுநீர் தேங்கிய தகராறில் 2 பேருக்கு உருட்டுக்கட்டை அடி: சகோதரர்களுக்கு வலை

நெட்டப்பாக்கம், செப். 5: புதுவை மாநிலம் நெட்டப்பாக்கம் வெங்கட்டா நகர் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (45). எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவரது உறவினர் அய்யப்பன் என்பவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். அவர் வீட்டை ஒட்டி கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வருகிறார். இவரது எதிர்வீட்டில் வசிப்பவர் அரிகிருஷ்ணன் மகன் அருள்குமார் (25). இவரது வீட்டில் இருந்து வெளியேறிய கழிவுநீர் அய்யப்பனின் மாட்டுக்கொட்டகை அருகே தேங்கி உள்ளது. இதுபற்றி அவர் பலமுறை எச்சரித்தும் அருள்குமார் கண்டுகொள்ள வில்லை. தொடர்ந்து கழிவுநீர் மாட்டுக்கொட்டகை அருகே வந்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.  

Advertising
Advertising

இதனால் அய்யப்பன், தனது உறவினரான காமராஜ் என்பவரை அழைத்து சென்று அருள்குமாரிடம் நியாயம் கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து ஆத்திரமடைந்த அருள்குமார், அவரது அண்ணன் அன்பு (29) ஆகிய இருவரும் காமராஜ் மற்றும் அய்யப்பனை உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர். படுகாயம் அடைந்த இருவரும் நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். பின்னர் அவர்கள் அளித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் விபல்குமார் வழக்குப்பதிந்து அருள்குமார், அன்பு ஆகியோரை தேடி வருகிறார்.

Related Stories: