எதிர்க்கட்சிகள் மனுதாக்கல் செய்யாததால் புதுச்சேரி துணை சபாநாயகராக காங். பாலன் போட்டியின்றி தேர்வு

புதுச்சேரி,  செப். 5:     புதுவையில் நடைபெறும் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான  ஆட்சியில் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் அண்மையில் நடந்த மக்களவை  தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனால் சபாநாயகர் பதவியை அவர்  ராஜினாமா செய்ய அப்பதவிக்கு துணை சபாநாயகரான சிவக்கொழுந்து ஆகஸ்ட் 3ம்தேதி  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து காலியாக உள்ள துணை  சபாநாயகர் பதவிக்கு இன்று (5ம் தேதி) தேர்தல் நடத்தப்படும் என  சட்டமன்றத்தில் சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இப்பதவிக்கு போட்டியிட ஏதுவாக தனது சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் பதவியை  காங்கிரஸ் எம்எல்ஏ எம்.என்.ஆர்.பாலன் ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை  முதல்வர் நாராயணசாமியிடம் நேற்று வழங்கினார்.

இந்த நிலையில் ஆளுங்கட்சி  தரப்பில் துணை சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சி சார்பில் காங்கிரஸ்  எம்எல்ஏவான பாலன் நிறுத்தப்பட்டார். முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள்  நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்களுடன்  நேற்று மதியம் சட்டசபை செயலகம் வந்த பாலன் சட்டசபை செயலரான வின்சென்ட்  ராயரிடம் மனு தாக்கல் செய்தார். சபாநாயகர் தவிர்த்து காங்கிரஸ்- திமுக  சட்டமன்ற உறுப்பினர்கள் என 17 பேர் எம்.என்.ஆர். பாலனை துணை சபாநாயகராக  முன்மொழிந்தும் வழி மொழிந்திருந்தனர். இருப்பினும் துணை சபாநாயகர்  பதவிக்கு போட்டியிட நேற்று மதியம் 12 மணிவரை சட்டசபை செயலர் கால நிர்ணயம்  தெரிவித்திருந்த நிலையில், பாலனை தவிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் வேறு  எந்த உறுப்பினரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதையடுத்து புதுச்சேரி துணை  சபாநாயகர் பதவிக்கு பாலன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இன்று காலை  சட்டசபையில் அவர் பதவி ஏற்றுக் கொள்கிறார்.

Tags :
× RELATED அரசு மகளிர் மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி திறப்பு