அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை

புதுச்சேரி, செப். 5:    புதுச்சேரி சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் திமுக எம்எல்ஏ சிவா ஒரு பிரச்னையை எழுப்பி பேசினார். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு 4 மாத ஊதிய நிலுவை மற்றும் 7வது சம்பள கமிஷன் அமல்படுத்தாததைக் கண்டித்து ஆசிரியர் தினமான 5ம் தேதி (இன்று) முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அவர்களுக்கு நிலுவை ஊதியம், 7வது சம்பள கமிஷன் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

அன்பழகன் (அதிமுக):  பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் அரசு ரூ.600 கோடி வரை செலவு செய்கிறது. அரசு பள்ளிகளில் 70 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால் நிதியுதவி பெறும் பள்ளிகளில் 26 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். சேவை மனப்பான்மையுடன் பள்ளிக்கூடங்களை அவர்கள் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கவும், 7வது சம்பள கமிஷனை அமல்படுத்த வேண்டும். இதற்கான தேதியை இங்கு அறிவிக்க வேண்டும். இதே கோரிக்கையை வலியுறுத்தி எம்எல்ஏக்கள் அனந்தராமன் (காங்,,), சாமிநாதன் (பாஜக), ஆகியோரும் பேசினர்.
Advertising
Advertising

கல்வியமைச்சர் கமலக்கண்ணன்:  7வது ஊதியக்குழுவை பொறுத்தவரை முதலில் அரசு துறைகளுக்கு முதல்வர் அமல்படுத்தினார். அதன்பிறகு, சொசைட்டி கல்லூரிகளுக்கு அறிவித்திருக்கிறார். அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் மற்றும் பென்சன் சேர்த்து வழங்க ரூ.16 கோடி முதல் ரூ.18 கோடி வரை ஆகும். முதல்வர் இதுபற்றி நல்ல சந்தோஷமான முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி பதிலளித்து பேசியதாவது: 7வது சம்பள கமிஷன் அமல்படுத்தியதில் கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அரசு நமக்கு அதற்கான நிதியை கொடுக்கவில்லை. ஆண்டுக்கு ரூ.550 கோடி நம்முடைய மாநில நிதியில் இருந்து இதனை வழங்குகிறோம். சொசைட்டி கல்லூரிகளுக்கு 7வது சம்பள கமிஷன் வழங்க வேண்டும் என்று எழுந்த கோரிக்கையை ஏற்று எங்களுடைய அமைச்சரவையில் முடிவு செய்து கோப்பு அனுப்பினோம். அதற்கு பல தடைகள் ஏற்பட்டு, இப்போது அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பட்ஜெட்டில் ரூ.41 கோடி அறிவித்துள்ளோம். இதன் மூலம் மொத்தம் ரூ.591 கோடி ஆகிறது.

நிதியுதவி பெறும் பள்ளிகளை பொறுத்தவரையில் 90 சதவீதம் அவர்களுக்கு நிதியுதவி நாம் கொடுக்கிறோம்.  அவர்களுக்கான கோப்பு அனுப்பி வைக்கப்பட்டபோது, தனக்குத்தான் மானிய அதிகாரம் இருக்கிறது என்று கூறி அந்த கோப்பு திருப்பி அனுப்பப்பட்டது. அது யார்? என உங்களுக்கு தெரியும். இதனால் 5 மாதங்களாக அவர்களுக்கு சம்பளம் இல்லாமல் இருந்தது. நான் பல முறை போராடி அமைச்சரவையில் முடிவு செய்து, நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக மானியம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை அடுத்து, அவர்களுக்கான மானியம் ரிலீஸ் ஆனது. பின்னர் ஆசிரியர் நியமனம், 7வது சம்பள கமிஷன் ஆகியவை கேட்டனர். ரூ.8425 கோடி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அனைத்து துறைகளுக்கும் நிதி  ஒதுக்கப்பட்டுவிட்டது. இப்போது நிதி ஆதாரத்தை தேட வேண்டியிருக்கிறது. வாக்குறுதியை கொடுத்தால் அதை உடனே நிறைவேற்றியாக வேண்டும்.

நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான நிதியை தேட வேண்டும். அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். இந்தாண்டுக்கு (2019-20) எந்தவித தடையும் இன்றி ஒவ்வொரு மாதமும் சம்பளம் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 6வது சம்பள கமிஷன் பரிந்துரையில் பழைய பாக்கி ரூ.120 கோடி வரவில்லை. 7வது சம்பள கமிஷன் பரிந்துரையில் இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. மக்களின் வரிப்பணத்தை முறையாக செலவு செய்தாக வேண்டும். இந்த நிதியாண்டில் இன்னும் குறுகிய காலத்தில், ஓரிரு மாதத்தில் நிதியை கண்டறிந்து அவர்களுக்கு செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: