ஊழியர்களுக்குள் பிரச்னை எதிரொலி டாஸ்மாக் பணியாளர் சங்கம் இரண்டாக உடைந்தது

விழுப்புரம், செப். 5: விழுப்புரத்தில் அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்திற்குள் மோதல் ஏற்பட்டதால் இரண்டாக உடைந்து புதிய சங்கத்தின் கூட்டம் நடந்தது. இதற்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு அவர்களை விரட்டியடித்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக்கில் பணிபுரியும் விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் பல்வேறு சங்கங்களை அமைத்து பணியாற்றி வருகின்றனர். தொமுச, அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு, அரசு பணியாளர் சங்கம், ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு சங்கம் அமைத்துள்ளனர். இதில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தில் ஊழியர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அதிலிருந்து பெரும்பாலான உறுப்பினர்கள் வெளியேறி நேற்று தனியாக ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். புதிய பேருந்துநிலையம் எதிரே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடந்தது. மேலும் இவர்கள் கு.பாலகிருஷ்ணனுக்கு எதிர் சங்கமான தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தில் இணைந்து கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

Advertising
Advertising

இதனை அறிந்த ஏற்கனவே டாஸ்மாக் பணியாளர் சங்கத்தில் உள்ள மாநிலபொருளாளர் ஜெய்கணேஷ் மற்றும் நிர்வாகிகள் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்துவதற்காக மண்டபத்திற்கு வந்தனர். அங்கு மோதல் சூழல் ஏற்பட்டதால் தாலுகா போலீசார் விரைந்து சென்று அவர்களை விரட்டினர். தொடர்ந்து பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இது குறித்து ஜெய்கணேஷ் கூறுகையில், எங்களது சங்கத்திலிருந்து வெளியேறியவர்கள் புதிய பெயர், சங்க எண்களை கொண்டு கூட்டம் நடத்தவேண்டும். அதைவிட்டு, எங்களது அமைப்பு, சங்க எண் பெயரிலேயே கூட்டம் நடத்துகின்றனர். இது குறித்து எஸ்பியிடம் புகார் அளித்துள்ளோம் என்றார். புதிய சங்கத்தின் பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், டாஸ்மாக் பணியாளர் சங்கத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள், பெரும்பாலான உறுப்பினர்கள் எங்களிடம் வந்து விட்டனர். சங்கம் பெயர், எண்களை பயன்படுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

அதுவரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. தீர்ப்பு வரும் வரை எங்களை யாரும் கேட்கமுடியாது. வேண்டுமானால் இரண்டு தரப்பினருமே பயன்படுத்தக்கூடாது என்று முடிவெடுக்கலாம். உறுப்பினர்களை பாதுகாக்கவும், கோரிக்கைகளை முன்வைத்ததையும் கண்டுகொள்ளாமல் சுயநலமாக இருந்ததால் நாங்கள் விலகி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து சங்கத்ைத வழிநடத்திச்செல்வோம் என்றார். புருஷோத்தமன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பிரபாகரன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்டத்தலைவர் ராம்குமார் துவக்கிவைத்தார். மாநில துணைப்பொதுச்செயலாளர் அருணகிரி, குமரவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், டாஸ்மாக் கடை வேலைநேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: