மாவட்ட கல்வித்துறை அலட்சியம் நோடல் ஆபீசர் நியமனத்தில் பாரபட்சம்

சின்னசேலம், செப். 5:  கல்வித்துறையில் நோடல் ஆபீசர் நியமனம் செய்ததில் பழங்குடியின பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை நியமிக்காமல் மாவட்ட கல்வித்துறை புறக்கணிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலையில் மணியார்பாளையம், இந்நாடு, கோமுகி அணை ஆகிய இடங்களில் தமிழக அரசின் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளிகளும், வெள்ளிமலையில் ஏகலைவா உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியும், கரியாலூரில் அரசு உதவிபெறும் டேனிஷ்மிஷன் பள்ளியும் உள்ளது. அதுமட்டுமில்லாமல் கல்வராயன்மலையில் கொட்டப்புத்தூர், மூலக்காடு ஆகிய இரு இடங்களில் அரசு மலைவாழ் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளிகளும், மேல்வாழப்பாடி, மேல்பாச்சேரி, பொட்டியம், பரங்கிநத்தம் உள்ளிட்ட 25 இடங்களில் அரசு உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளிகளும், நொச்சிமேடு, மண்டகப்பாடி, வாரம், வயலம்பாடி, மொழிப்பட்டு, மொட்டையனூர் உள்ளிட்ட 25 இடங்களில் அரசு உண்டு உறைவிட தொடக்கப்பள்ளிகளும் இயங்கி வருகிறது.

Advertising
Advertising

கல்வராயன்மலையில் வாழும் மக்கள் கல்வியறிவில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் 15 ஊராட்சிகளை கொண்ட கல்வராயன்மலையில் சுமார் 55 மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகிறது. இப்பள்ளிகள் தற்போது ஆதிதிராவிட நலத்துறையில் இருந்து பிரிக்கப்பட்டு பழங்குடியினர் நலத்துறையின்மூலம் இயங்கி வருகிறது. தற்போது தமிழக அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் அதிகார வரம்பை அதிகரிக்கும் வகையில்  அப்பள்ளியை சுற்றி உள்ள சுமார் 15க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளையும் கண்காணித்து ஆய்வு செய்யும் அதிகாரத்தை வழங்கி உள்ளது. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நோடல் ஆபீசர் என்ற பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பணி ஆசிரியர்களாகவும், அதிகாரம் முழுவதையும் நோடல் ஆபீசரான அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடமே வழங்கி உள்ளது.

இதைப்போல விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட நோடல் ஆபீசர்களை அதாவது அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை மாவட்ட கல்வித்துறை நியமனம் செய்து அறிவித்துள்ளது. இதில் கல்வராயன்மலையில் இந்நாடு, மணியார்பாளையம், வெள்ளிமலை, கோமுகி அணை ஆகிய இடங்களில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் இருந்தும் அங்குள்ள தலைமை ஆசிரியர்களை நோடல் ஆபீசர்களாக மாவட்ட கல்வித்துறை   நியமனம் செய்யவில்லை. கல்வராயன்மலையில் உள்ள எழுத்தூர், முண்டியூர், மேல்வாழப்பாடி, நொச்சிமேடு, கொட்டபுத்தூர், மேல்பாச்சேரி, வெள்ளிமலை, மாயம்பாடி உள்ளிட்ட ஊர்களில் உள்ள பள்ளிகளின் நோடல் ஆபீசர்களாக கரடிசித்தூர், எடுத்தவாய்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை மாவட்ட கல்வி நிர்வாகம் நியமனம் செய்துள்ளது.

இந்த நோடல் ஆபீசர்கள் மலைக்கு சென்று ஆய்வு செய்வது என்பது சந்தேகம்தான். கல்வராயன்மலைக்கு சென்று கண்காணிப்பது

என்பது அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையாகவே தெரியும். இதனால் அவர்கள் தலைமை ஆசிரியராக உள்ள பள்ளியை சரிவர கண்காணிக்க முடியாமல், மாணவர்களின் கல்வி நலனும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கல்வராயன்மலையில் உள்ள இந்நாடு, மணியார்பாளையம், வெள்ளிமலை, கோமுகி அணை ஆகிய இடங்களில் உள்ள அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளிகளில் தொடர்ந்து தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றி வரும் அனுபவமிக்கவர்களை நோடல் ஆபீசர்களாக அறிவிக்காமல் அவர்களை மாவட்ட கல்வித்துறை நிர்வாகம்  புறக்கணித்துள்ளது கல்வராயன்மலை பழங்குடியின ஆசிரியர்களிடையே ஒருவித நெருடலை ஏற்படுத்தி உள்ளது.

கல்வராயன்மலை மாணவர்கள் தொடர்ந்து கல்வி அறிவில் 100 சதவீதம் முன்னேறவும், அதிக மதிப்பெண்களை பெற்று வேலைவாய்ப்பை பெற்றிடும் வகையில் விளங்கிட கல்வராயன்மலையில் உள்ள தலைமை ஆசிரியர்களையே நோடல் ஆபீசர்களாக நியமிக்க வேண்டும். அதாவது கல்வராயன்மலையை நான்காக பிரித்து மேற்கு பகுதிக்கு மணியார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரையும், கிழக்கு பகுதிக்கு கோமுகி அணை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரையும், வடக்கு பகுதிக்கு இந்நாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரையும், தெற்கு பகுதிக்கு கொட்டபுத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரையும் நோடல் ஆபீசர்களாக நியமிக்க வேண்டும் என்று மலைமக்கள், ஆசிரியர்கள்

எதிர்பார்க்கின்றனர். பழங்குடியினர் நலத்துறையை பிரித்தும் பயனில்லை ஒன்றாக இருந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை தற்போது தனித்தனியே பிரிந்துள்ளது.

ஆதிதிராவிட நலத்துறைக்கு தனி அலுவலரும், பழங்குடியினர் நலத்துறைக்கு தனி அலுவலரும் உள்ளனர். இதை பிரித்ததன் நோக்கமே மலைவாழ் மக்கள் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில்தான் பிரிக்கப்பட்டது. அப்படியிருக்கும் பட்சத்தில் பழங்குடியின உண்டு உறைவிட பள்ளிகளை கண்காணிக்க தனி மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை நியமித்தால் நன்றாக இருக்கும். அதைப்போல கல்வராயன்மலையில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அலுவலக உதவியாளர், கணிப்பொறியாளர், இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்கள் நீண்ட காலமாக காலியாக இருப்பதால் தலைமை ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையாக உள்ளது. மேலும் பழங்குடியின பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காமல் உள்ளது. இதனால் பழங்குடியின நலத்துறையை தனியாக பிரித்தும் பயனில்லை என்று ஆசிரியர்கள், பொதுமக்கள் புலம்புகின்றனர்.

Related Stories: