புதுக்கோட்டை மாவட்டத்தில் போதிய பராமரிப்பில்லாத ஊராட்சி நூலகங்கள்

புதுக்கோட்டை, செப்.5: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் உள்ள நூலகங்கள் போதிய பராமரிப்பு இன்றி இருப்பதால் விரைந்து சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம், அறந்தாங்கி, புதுக்கோட்டை, விராலிமலை, திருமயம், அன்னவாசல், குண்றன்டாற்கோவில், ஆவுடையார்கோவில், கந்தர்வகோட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஒன்றியங்கள் உள்ளது. இந்த ஒன்றியங்களின் கீழ் 497 பஞ்சாயத்துகள் செயல்படுகின்றன. இந்த பஞ்சாயத்துகளில் கடந்த திமுக ஆட்சியின்போது அனைத்து இடங்களிலும் நூலகம் திறக்கப்பட்டது. கிராம பஞ்சாயத்துகளில் ஆரம்பிக்கப்பட்ட ஒவ்வொரு நூலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கில இலக்கிய புத்தகங்கள், கவிதை, கடை புத்தகங்கள், நாவல்கள், போட்டித்தேர்வு புத்தகங்கள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் தேவைப்படும் வகையில் அனைத்து துறை சம்மந்தமான புத்தகங்கள் வாங்கி வைக்கப்பட்டது. இந்த நூலகங்களை கண்காணிக்க கிராமத்தில் ஓய்வு பெற்றவர்களை நியமித்துள்ளனர். இவர்களுக்கு மாதம் தோறும் ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் சரியான முறையில் நூலகத்தை கண்காணிப்பதில்லை என்றும் இதனை ஒன்றிய அளவில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகள் கண்டுகொள்வதில்லை என்று குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் பல இடங்களில் நூலகம் செயல்பட சொந்த கட்டிடம் இல்லை. சொந்த கட்டிடம் இருக்கும் ஒரு சில இடங்களில் அந்த கட்டிடத்தை வேறு பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்கின்றனர்.

மேலும் சில ஆண்டுகளாக புதிதாக எந்த புத்தகதையும் வாங்கவில்லை. பஞ்சாயத்துகளில் உள்ள ஒரு சில நூலகங்கள் மட்டுமே வாரத்தில் சில நாட்கள் திறக்கப்படுகிறது. பெருபான்மையான நூலகங்கள் அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டு கிடப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து கல்வியாளர்கள் கூறியதாவது: நூலகம் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வந்து செல்லும் இடமாக இருக்க வேண்டும். புத்தகம்தான் ஒருவரை செதுக்குகிறது. இப்படி மனிதனை செதுக்கும் புத்தகங்கள் உள்ள ஊராட்சி நூலகங்களை ஒன்றிய அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது. பஞ்சாயத்தில் உள்ள நூலகம் சரியான முறையில் செயல்படவில்லை என்று தெரிந்துகொள்ள நூலகத்தில் உள்ள வருகை பதிவேட்டை பரிசோதித்தாலே போதும். குறிப்பாக ஒரு நூலகத்திற்கு புத்தகங்கள் படிக்க உள்ளே செல்ல வேண்டுமெனில் நூலகர் வைத்திருக்கும் நோட்டில் வாசகர்கள் ையொப்பமிட்டு வந்த நேரம், வெளியில் செல்லும் நேரத்தையும் பதிவு செய்ய வேண்டும். மேலும் ஒரு சில புத்தகங்கள் வீட்டிற்கு எடுத்து சென்று படிக்க வேண்டுமெனில் நூலகரிடம் பதிவு செய்து ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் கொண்டு வந்து திருப்பி கொடுத்துவிட வேண்டும். ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுபோன்ற எந்த நடவடிக்கையும் நடப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் யூனியன் அலுவலங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள்தான். இதனால் நூலகங்கள் அழிந்து வருகிறது. இனியாவது பஞ்சாயத்துகளில் உள்ள நூலகங்களை சரியான முறையில் பராமரித்து மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றனர்.


Tags :
× RELATED ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு...