திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் பலத்த பாதுகாப்புடன் நடந்தது

திருவண்ணாமலை, செப்.5: திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.திருவண்ணாமலை மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 2ம் தேதி ெவகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி, மாவட்டம் முழுவதும் சுமார் 1,300 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, கடந்த 3 நாட்களாக பக்தர்கள் வழிபட்டு வந்தனர். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவாக விநாயகர் சிலைகள் விஜர்சனம் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. அதன்படி, திருவண்ணாமலை, செங்கம், போளூர், சேத்துப்பட்டு, கலசபாக்கம், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் விஜர்சனம் செய்யப்பட்டது.அதன்படி, திருவண்ணாமலையில் நேற்று காலை 10 மணியளவில் இருந்து சிலைகள் விஜர்சனம் நடந்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, சம்பந்தப்பட்ட விழாக்குழுவினர் ஊர்வலமாக கொண்டு சென்று, தாமரை குளத்தில் விஜர்சனம் செய்தனர்.மேலும், இந்து முன்னணி சார்பில் காந்தி சிலை அருகில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்பட்டது. அதில், இந்து முன்னணி சென்னை மாநகர தலைவர் இளங்கோ, மாவட்ட செயலாளர்கள் அருண்குமார், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதேபோல், பாஜ சார்பில் தனியே விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. அதில், கட்சியின் நிர்வாகி சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலையில் முதன்முறையாக இந்து முன்னணி மற்றும் பாஜக தனித்தனியே விநாயகர் ஊர்வலம் நடத்தினர். அதையொட்டி, எஸ்பி சிபிசக்கரவர்த்தி தலைமையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.மேலும், விநாயகர் ஊர்வலத்தின்போது ஒட்டுமொத்த சிலைகளையும் காந்திசிலை பகுதியில் நிறுத்தி, அங்கிருந்து ஊர்வலமாக செல்லும் நிலை கடந்த ஆண்டுகளில் நடந்தது. அதனால், பதற்றமும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை போலீஸ் கட்டுப்பாடு காரணமாக, ஊர்வலத்தில் மிக குறைந்த சிலைகளே அனுமதிக்கப்பட்டன. எனவே, பதற்றம் தவிர்க்கப்பட்டது.மேலும், தாமரை குளத்தில் சிலைகளை விஜர்சனம் செய்யும்போது ஏற்படும் நெரிசல், சிக்கல் இந்தமுறை இல்லை. அந்த பகுதியில் போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு சிலையாக தாமரை குளத்தில் விஜர்சனம் செய்யப்பட்டன.

அதேபோல், செங்கம் சிங்காரப்பேட்டை ஏரியில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் நடந்தது. மேலும், கலசபாக்கம், போளூர், சேத்துப்பட்டு, தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நேற்று விநாயகர் சிலைகள் விஜர்சனம் நடந்தது.வந்தவாசி, செய்யாறு ஆகிய இடங்களில் இன்றும், ஆரணியில் நாளையும் விநாயகர் விஜர்சனம் நடக்கிறது. வந்தவாசியில் நேற்று ஒரு சிலை மட்டும் ஊர்வலமாக கொண்டு சென்று சுகநதியில் விஜர்சனம் செய்தனர்.விநாயகர் ஊர்வலம் மற்றும் விஜர்சன விழாவை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றும், நாளையும் தொடர உள்ளது.

Tags :
× RELATED பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெண்...