₹4 கோடி அடகு நகை மோசடி நகை திருப்பி கேட்டு வங்கியை வாடிக்கையாளர்கள் முற்றுகை சோளிங்கரில் பரபரப்பு

சோளிங்கர், செப்.5: சோளிங்கரில் அடகு வைத்த நகைகள் ₹4 கோடி மோசடி சம்பவத்தில், நகைகளை திருப்பிக்கேட்டு வங்கியை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், சோளிங்கர் மையப்பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கணக்கு வைத்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பலர் நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் பெற்றனர். இந்நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நகைகளை மீட்க வந்தபோது, பலரது நகைகள் போலியாக இருந்ததும், சிலரது நகைகள் மாயமாகியிருந்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் வங்கி நிர்வாகத்திடம் கேட்டனர். இதையடுத்து, வங்கி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டது. இதில் நகை மதிப்பீட்டாளர் பாபு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, வங்கி நிர்வாகம் சார்பில் பாபு மீது கடந்த 2017ம் ஆண்டு சோளிங்கர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வங்கியில் 150க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான ₹4 கோடி மதிப்புள்ள அடமான நகைகள் மோசடி நடந்து இருப்பது தெரியவந்தது.இந்நிலையில் போலீசார் வழக்குப்பதிந்து பாபுவை கைது செய்து சோளிங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து, பாபு சிறைக்கு சென்ற சில மாதங்களிலேயே ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு சோளிங்கர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

Advertising
Advertising

இந்நிலையில், வாடிக்கையாளர்கள் வங்கியில் அடகு வைத்த நகைகளை திரும்ப கேட்டு வந்தனர். ஆனால், வங்கி நிர்வாகம் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் நேற்று காலை வங்கி முன் குவிந்தனர். அப்போது வங்கியை திறக்க வந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தடுத்து நிறுத்தினர். வங்கியை திறக்க விடாமல் முற்றுகையிட்டனர். இதுகுறித்து, தகவலறிந்த சோளிங்கர் ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து வாடிக்கையாளர்களிடம் சமரச பேச்சு நடத்தினர். ஆனால், வாடிக்கையாளர்கள், ‘எங்கள் நகையை திருப்பி கொடுங்கள் அல்லது அதற்கு ஈடான பணத்தை வழங்க வேண்டும். இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக வங்கி மேலாளர் தெரிவிக்கிறார். பல மேலாளர்கள் மாறி விட்ட நிலையிலும் இந்த ஒரே பதிலை திரும்ப திரும்ப வங்கி நிர்வாகம் சொல்லிவருவதை நிறுத்தச் சொல்லுங்கள்’ என ஆவேசத்துடன் தெரிவித்தனர். இதையடுத்து, நாளை (இன்று) காலை வங்கி திறப்பதற்கு முன் மேல் அதிகாரிகளை வரவழைத்து பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு வங்கி திறக்கப்படும். அதுவரை வங்கி செயல்படாது என்று சப்-இன்ஸ்பெக்டர் உறுதியளித்தார். தொடர்ந்து வங்கி நேற்று திறக்கப்படவில்லை.இதையடுத்து, வாடிக்கையாளர்கள் மதியம் 2 மணிக்கு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் 4 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: