தட்டுப்பாட்டால் வெளிமாநில ரோல் பயன்படுத்தியது எதிரொலி அனைத்து அரசு பஸ்களிலும் கூடுதல் பேப்பர் ரோல் வழங்க உத்தரவு அதிகாரிகள் தகவல்

வேலூர், செப்.5:

அரசு பஸ்களில் டிக்கட் வழங்குவதற்காக வெளிமாநில பேப்பர் ரோல் பயன்படுத்தியதை தொடர்ந்து தற்போது அனைத்து அரசு பஸ்களிலும் கூடுதல் பேப்பர் ரோல் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம், விரைவு பேருந்து ஆகியவற்றுடன், விழுப்புரம், கும்பகோணம், புதுக்கோட்டை ஆகிய 8 கோட்டங்களில் 321 டெப்போக்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரசுக்கு நாள் ஒன்றுக்கு ₹28 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. ஆனாலும், ஆயுட்காலம் முடிந்த பிறகும் இயக்கப்படும் அரசு பஸ்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே இருக்கிறது. அரசு பஸ்களில் அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்கி வந்தனர். இதையடுத்து நீண்ட தூரம் செல்லும் பஸ்களில் கடந்த 2010ம் ஆண்டு, டிக்ெகட் பிரின்ட் செய்து தரும் இடிஎம் மெஷின் என்ற கையடக்க டிக்ெகட் வழங்கும் இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்தது.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பஸ்களில் கண்டக்டர்களுக்கு வழங்கப்பட்டஇடிஎம் மெஷின்களுக்கான பேப்பர் ரோல் இல்லாமல் பிற மாநிலங்களின் போக்குவரத்து கழக முத்திரை, தனியார் நிறுவனத்தின் முத்திரை கொண்ட பேப்பர் ரோல் பயன்படுத்தி வந்தாகவும், பேப்பர் ரோல் வழங்குவதில் மோசடி நடந்திருப்பதாகவும் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக கடந்த 27ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக அனைத்து டெப்போக்களில் உள்ள அரசு பஸ்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்து பேப்பர் ரோல்களையும் வழங்க உத்தரவு விடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் உள்ள அனைத்து பெட்போக்களில் இடிஎம் மிஷின் மூலம் டிக்கெட் வழங்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை கணக்கு எடுக்கும் பணி நடைபெற்றது. இதையடுத்து ஒரு நாளுக்கு ஒரு பஸ்சுக்கு 3 பேப்பர் ரோல் வீதம் ஒரு மாதத்திற்கு 90 பேப்பர் ரோல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து டெப்போக்களுக்கு தேவையான அளவு பேப்பர் ரோல் வழங்கப்பட்டுள்ளது. வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் ஒரு மாத்திற்கு தேவையான 900 பேப்பர் ரோல் வழங்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Related Stories: