ஊர்வலத்தில் போலீசாரின் கெடுபிடிகளை கண்டித்து விநாயகர் சிலைகளுடன் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியல் ஒன்றரை மணி நேரம் பரபரப்பு

வேலூர், செப்.5:வேலூர் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வல பாதையில் போலீசார் தேவையின்றி ஏற்படுத்திய கெடுபிடிகளால் அதிருப்தியடைந்த இந்து முன்னணியினரும், பொதுமக்களும் தேசிய நெடுஞ்சாலையில் விநாயகர் சிலைகளை வைத்து ஒன்றரை மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.விநாயகர் சிலைகள் ஊர்வலம் கோட்டை சுற்றுச்சாலை வழியாக முள்ளிப்பாளையம் சென்று அங்கிருந்து சேண்பாக்கம் சாலை வழியாக சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வழக்கமாக ஊர்வலம் செல்லும் சர்வீஸ் சாலையில் மாலை 4.30 மணியளவில் திரும்பியது. அப்போது திடீரென ஊர்வலத்தினரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் இந்து முன்னணியினரிடம் ஊர்வலத்தை தேசிய நெடுஞ்சாலையின் பிரதான சாலைக்கு திருப்பும்படி கூறினர்.

அதற்கு இந்து முன்னணியினர், ‘நியாயமாக கொணவட்டம் வழியாகத்தான் ஊர்வலம் செல்ல வேண்டும். ஆனால், சட்டத்துக்கு மதிப்பளித்து சில ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம், காவல்துறையின் வழிகாட்டுதலில் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை வழியாக ஊர்வலம் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நீங்கள் தேசிய நெடுஞ்சாலை பிரதான பகுதி வழியாக செல்ல வேண்டும் என்றால் எப்படி?’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் போலீசார் அதற்கு சம்மதிக்காததால் ஆத்திரமடைந்த ஆண்களும் பெண்களும் விநாயகர் சிலைகளை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி மற்றும் பொதுமக்களிடம் சப்-கலெக்டர் மெகராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், சர்வீஸ் சாலை வழியாகத்தான் செல்வோம் என்பதில் இந்து முன்னணியினர் உறுதிக் காட்டினர். இதனால் சாலை மறியல் 1.30 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. போலீசார், வருவாய்த்துறையினரின் எந்த சமாதானத்தையும் இந்து முன்னணியினர் ஏற்கவில்லை.இதனால் வேறுவழியின்றி போலீசார் ஊர்வலத்தினரை சர்வீஸ் சாலையிலேயே அனுமதித்தனர். இதையடுத்து மாலை 6.30 மணியளவில் ஊர்வலம் சதுப்பேரியை நோக்கி சென்றது. அங்கு விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன.இதற்கிடையில் முள்ளிப்பாளையம், கொணவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட பிரமாண்டமான விநாயகர் சிலைகள் மாலை 3 மணியளவில் ஊர்வலமாக புறப்பட்டது. இந்த ஊர்வலம் கொணவட்டம் மேம்பாலம் அருகில் இந்து முன்னணியினரின் விநாயகர் சிலை ஊர்வலத்துடன் கலந்து சதுப்பேரியை நோக்கி வழக்கமாக செல்லும்.

ஆனால் இந்து முன்னணியினர் சாலை மறியல் காரணமாக கொணவட்டத்தில் இருந்து புறப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை போலீசார் சதுப்பேரியை நோக்கி செல்லும்படி அறிவுறுத்தினர்.இதையடுத்து கொணவட்டம், முள்ளிப்பாளையம் விநாயகர் சிலைகள் சதுப்பேரியில் விஜர்சனம் செய்யப்பட்டன. விநாயகர் விஜர்சன ஊர்வலத்தை முன்னிட்டு கொணவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்று அசம்பாவிதம் ஏற்படாதவாறு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டதுடன், தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டனர். அதேநேரத்தில் வழக்கமாக அமைதியாக சென்று கொண்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை தேவையற்ற கெடுபிடிகள் காட்டியதுடன், தேசிய நெடுஞ்சாலையின் பிரதான பகுதிக்கு செல்லும்படி கூறி தேவையற்ற பதற்றத்தை போலீசார் உருவாக்கியதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

Related Stories: