ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மருத்துவமனையில் சிகிச்சை

வேலூர், செப்.5:வேலூர் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் வேலூரில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர், இன்ஸ்பெக்டர் கனி. இவருக்கும் அரக்கோணம் பகுதியில் ஆளும்கட்சியை சேர்ந்த கடைக்காரர்களுக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளதாக தெரிகிறது. இதில் அதிமுக பிரமுகர்கள் தலையீடு இருந்ததாம். இதனால் உடனடியாக இன்ஸ்பெக்டர் கனி அரக்கோணத்தில் இருந்து வேலூர் ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரோடு அரக்கோணம் போக்குவரத்து பிரிவில் பணியாற்றிய போலீசாரும் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.

பணியிடமாற்றம் செய்யப்பட்டதில் இன்ஸ்பெக்டர் கனி மிகவும் விரக்தியாக இருந்தாராம். மேலும் தவறே செய்யாத தனக்கு பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக சக அதிகாரிகளிடம் புலம்பிக்கொண்டிருந்தாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் மருத்துவ விடுமுறை எடுத்துக்கொண்டு சென்றாராம். பின்னர் மாலையில் வேலூர் போலீஸ் குடியிருப்பிற்கு சென்ற அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக போலீசார் அவரை மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED காட்பாடியில் டாக்டர் வீட்டில் பூட்டை...