தமிழகம் முழுவதும் 900 பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பட்டியல் தயார் நிர்வாக கட்டமைப்பை மாற்றுவதில் தீவிரம்

வேலூர், செப்.4: தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை கண்காணிக்கும் வகையில் அதிகாரம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள 900 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் பட்டியல் தயார் நிலையில் உள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வசம் அப்பள்ளியின் அருகில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் நிர்வாகம் ஒப்படைக்கப்படும் என்று அறிவித்த நிலையில், சில இடங்களில் ஓரிரு பள்ளிகள் மட்டுமே அப்பள்ளி தலைமை ஆசிரியரின் அதிகார வரம்புக்கு உட்பட்டதாக வந்தது.  இதனால் அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் அதிகார வரம்பை அதிகரிக்கும் வகையில் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள 15 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் மேல்நிலைப்பள்ளி முதல்வரின் அதிகாரத்துக்கு உட்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இனி பணி ஆசிரியர்களாகவே கருதப்படுவர். அவர்களின் மொத்த அதிகாரமும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கான முறையான அரசாணையும், தகுதியேற்றம் செய்யப்படும் 900 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பட்டியலும் விரைவில் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘சமூக வலைதளங்கள் மூலம் பிரின்ஸ்பால் என்ற வார்த்தையை வைத்து பல தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களால் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதனை விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்திருக்கலாம். இந்த முடிவு அமலாக்கப்பட்டால் நிச்சயம் பள்ளிக்கல்வித்தரம் பாதிக்கப்படும். தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் நிலையையும், தொடக்கக்கல்வியின் தரத்தையும் மேம்படுத்த வேண்டுமே தவிர, அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் அதிகார வரம்பை குறைப்பது தொடக்கக்கல்வியின் நிலையை அதலபாதாளத்தில் தள்ளிவிடும்.
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் அதிகார எல்லைக்குள் சுற்று வட்டார தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் கொண்டு வரப்படும்போது, தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் கடமையை சரிவர செய்யாத நிலை ஏற்படும். ஆகவே, அரசு இதுபோன்ற முடிவை எடுத்திருந்தால் அதனை கைவிட வேண்டும்’ என்றனர்.

Tags :
× RELATED காட்பாடியில் டாக்டர் வீட்டில் பூட்டை...