தமிழகத்தில் வேகமாக பரவுகிறது டிப்தீரியாவை கட்டுப்படுத்த 5 வயது வரை குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம் சுகாதாரத்துறை நடவடிக்கை

வேலூர், செப்.4: தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டிப்தீரியா நோயை கட்டுப்படுத்த 5 வயது வரை குழந்தைகளுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளை அதிகம் தாக்கும் நோய்களில் தொண்டை அடைப்பான் நோய் மிகவும் ஆபத்தானது. இந்த நோய் பாதித்த குழந்தைகளுக்கு தொண்டை பகுதியில் வலியுடன் கூடிய வீக்கம், நாக்கு நிறம் மாறி காணப்படும். மூச்சு விடுவதில் சிரமம், நுரையீரல் பாதிப்புடன், திடீர் மரணத்தை ஏற்படுத்தும். இந்த நோய் பாதிப்பு தமிழகத்தை பொறுத்தவரையில் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது. டிடி என்கிற தடுப்பூசி இந்த நோய் பாதிப்பிற்கு ஏற்ற மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிப்தீரியா நோய் பாதிப்பு கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் கண்டறியப்பட்டது. நாளடைவில் இந்த நோய் பாதிப்பு மனிதர்கள் மூலமாக பரவி தற்போது தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பரவி வருகிறது.

உடல்நிலை பாதிகப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வந்த 10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு டிப்தீரியா நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கட்டுக்குள் இருந்த டிப்தீரியா நோய் தற்போது மீண்டும் தலைதூக்கி வேகமாக பரவி வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். டிப்தீரியா நோய் பாதிப்பை தடுக்க டிடி தடுப்பூசியை 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த சில நாட்களாக டிப்தீரியா நோய் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. பிறந்து ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதங்களும், 4ம் கட்டமாக ஒன்றரை வயதிலும், 5ம் கட்டமாக 5 வயதிலும் இந்த தடுப்பூசியை போட வேண்டும். ஆனால் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது 5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில்லை.

இதனால் தொண்டை அடைப்பான் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. டிடி என்று கூறப்பட்டு வந்த தடுப்பூசி தற்போது டிடீ என்று பெயரிடப்பட்டுள்ளது. இனி அனைத்து வகையான தொற்றுநோய் தாக்குதலுக்கும் இந்த டிடீ தடுப்பூசி போடப்படும். அரசு தலைமை மருத்துவமனைகள், நகர்புற ஆரம்ப சுகாதாரநிலையங்களில் டிடீ மருந்துகள் போதியளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Tags :
× RELATED மாவட்டத்தில் பரவலாக லேசான மழை