திருப்பத்தூரில் தொழிலாளி குத்திக்கொலை கொலையாளியை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்

திருப்பத்தூர், செப்.4: திருப்பத்தூரில் மூட்டை தூக்கும் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளியை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், மாலையில் குற்றவாளியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் குமரேசன்(35), மூட்டை தூக்கும் தொழிலாளி. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு குமரேசன், அதே பகுதியை சேர்ந்த வேலு மகன் சூரியா(20) என்பவரை மூட்டை தூக்கும் வேலைக்கு சேர்த்தார். நேற்று முன்தினம் குமரேசன் வழக்கம்போல் சூரியா மற்றும் சக தொழிலாளர்களை வேலைக்கு பிரித்து அனுப்பி வைத்தார். அப்போது சூரியா வேலைக்கு செல்லும் இடத்தில் குறைவான கூலி தருவதாக கூறி சக தொழிலாளர்களை தடுத்து திரும்ப அழைத்து சென்றுவிட்டாராம். இதில் ஏற்பட்ட தகராறில் அன்று இரவு 8 மணியளவில் குமரேசன் வீட்டுக்கு போதையில் வந்த சூரியா, குமரேசனிடம் தகராறில் ஈடுபட்டதுடன், மூட்டை தூக்கும் கொக்கியால் குமரேசனின் கழுத்தில் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

இதையடுத்து, குமரேசனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் தலைமறைவாக உள்ள குமரேசனை கொலை செய்த சூரியாவை கைது செய்ய வலியுறுத்தி நேற்று காலை திருப்பத்தூர்- சேலம்- திருவண்ணாமலை கூட்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வரைந்து வந்த திருப்பத்தூர் டவுன் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கிருந்தவர்கள் ‘தலைமறைவாக உள்ள சூரியாவை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும், கஞ்சா வியாபாரத்தை தடுக்க வேண்டும்'' என்றனர். அதற்கு போலீசார், ‘தனிப்படை அமைத்து குற்றவாளியை கைது செய்யவும், கஞ்சா விற்பனையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். கொலை குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், டிஎஸ்பி தங்கவேலு, இன்ஸ்பெக்டர் பழனி, மதனலோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவான சூரியாவை தேடி வந்தனர். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில் நேற்று மாலை திருப்பத்தூர் கொரட்டி பஸ் நிலையத்தில் வேறு ஊருக்கு தப்பி செல்வதற்காக நின்றிருந்த சூரியாவை இன்ஸ்பெக்டர் மதனலோகன் தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். வாக்குமூலத்தில் சூரியா கூறியதாக போலீசார் கூறுகையில், ‘கூலி பிரிப்பது தொடர்பாக எனக்கும் குமரேசனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது என்னை குமரேசன் அடித்துவிட்டார். கொக்கியால் கன்னத்தில் தாக்கினார். இதனால் நான் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்து கத்தியை கொண்டு வந்து குமரேசனை குத்தி கொலை செய்தேன்’ என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags :
× RELATED காட்பாடியில் டாக்டர் வீட்டில் பூட்டை...