நிலத்தடிநீர் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இருப்பினும் மணிலா உற்பத்தியில் தமிழகத்தில் முதலிடம் பிடிப்போம்.. கலெக்டர் பேச்சு

திருவண்ணாமலை, செப்.4: நிலத்தடிநீர் பாதிக்கப்பட்ட மாவட்டமாக திருவண்ணாமலை அறிவிக்கப்பட்டு இருந்தாலும், மணிலா உற்பத்தியில் தமிழக அளவில் முதலிடம் பிடிப்போம் என கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசினார். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நெல்லியில் செயல்பட்டு வரும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் வேளாண்மை அறிவியல் மையம் சார்பில், ஜல்சக்தி அபியான் திட்டம் குறித்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நேற்று திருவண்ணாமலையில் நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். வேளாண்மை அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான என்.ரமேஷ் ராஜா முன்னிலை வகித்தார். தொழில்நுட்ப வல்லுநர் வி.சுரேஷ் வரவேற்றார். தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி திறந்து வைத்து பார்வையிட்டு பேசியதாவது: திருவண்ணாலை மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம். இங்கு தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. விவசாயத்திற்கு உகந்த மாவட்டம். மத்திய, மாநில அரசுகள் விவசாயத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரவேண்டும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

வங்கி மேலாளர்கள் விவசாயி வீட்டிற்கு காரில் வந்து, எங்களது வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்க வேண்டும், எங்களிடம் கடன் பெறுங்கள் என்று கூறும் நிலைக்கு மாறும். திருவண்ணாமலை மாவட்டம் விவசாயத்தில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடந்த 2017-18ம் ஆண்டு நெல் உற்பத்தியில் தமிழகத்தில் முதல் மாவட்டமாக திகழ்கிறது. அதேபோல், சொட்டு நீர்பாசனம் செயல்படுத்துவதிலும் முதலிடத்தில் உள்ளது. மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மணிலா பயிரிடப்பட்டுள்ளது. அறுவடைக்கு பிறகு மணிலா உற்பத்தியிலும் நமது மாவட்டம் தான் முதலிடத்தில் இருக்கும். இத்தனை பெருமை கொண்டிருந்தாலும், விவசாயிகளும் சரி, பொதுமக்களும் சரி தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தண்ணீரை சேமிக்க மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டம், தமிழக அரசின் குடிமராமரத்து பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தண்ணீர் சேமிக்காததால், விவசாயத்திற்கு மட்டும் இல்லாமல், இந்த ஆண்டு குடிநீர் பிரச்னையும் ஏற்பட்டது. இந்திய அளவில் திருவண்ணாமலை மாவட்டம், நிலத்தடிநீர் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் இருப்பது 826 கிராம ஊராட்சிகள் தான். இதில் 731 கிராம ஊராட்சிகளில் நிலத்தடிநீர் மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றி நிலத்தடி நீரை சேமிப்பத்தில் முதல் மாவட்டமாக வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் வேளாண்மை துறை அதிகாரிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தேசிய சாலை பாதுகாப்பு வார விழா...