போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி தெள்ளார் காவல் நிலையத்தில் பரபரப்பு

வந்தவாசி, செப்.4: வந்தவாசி அடுத்த தெள்ளார் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்நமண்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(45). இவர் பால்கொள்முதல் செய்து தனியார் கம்பெனிக்கு விநியோகித்து வருகிறார். இவரது மனைவி சரசு(40). பால் கொள்முதல் செய்வதில் வெங்கடேசனுக்கு உதவியாக இருந்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், நாள்தோறும் பசும்பாலை சரசிடம் விற்று வந்தார். பால் தரமில்லை என சரசு கூறியதால், கடந்த ஒரு மாதமாக வேறு நபரிடம் விற்று வருகிறாராம். இதனால் அந்த பெண்ணுக்கும், சரசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து சரசு தெள்ளார் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

அதன்பேரில், விசாரணை நடத்துவதற்காக சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜூலு, இருதரப்பினரையும் நேற்று காவல் நிலையம் வருமாறு அழைத்தார். அதன்பேரில், இருதரப்பினரும் காவல் நிலையம் வந்தனர். அப்போது, சரசு குடும்பத்தினர் சமரசமாக செல்ல சம்மதித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், சமரசத்தை ஏற்க மறுத்த சரசு காவல் நிலையம் வெளியே சென்று, தனது புடவையில் மறைத்து வைத்திருந்த விஷத்தை திடீரென குடித்தார். அங்கிருந்த உறவினர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து, விஷ பாட்டிலை தட்டிவிட்டனர். இதையடுத்து, சரசுவை அவரது உறவினர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். காவல் நிலையம் முன் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெண்...