மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்த அனைத்து அரசு பள்ளிகளிலும் வாரத்துக்கு 2 பாடவேளை ஒதுக்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

திருவண்ணாமலை, செப்.4: அரசு பள்ளிகளில் மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்த வாரத்துக்கு இரண்டு பாடவேளை நேரத்தை ஒதுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: பள்ளி மாணவர்களிடம் வாசிக்கும் வழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நூலகங்களை பயன்படுத்தினால் போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் எளிதில் வெற்றிபெற உதவியாக இருக்கும். எனவே, ஒவ்வொரு பள்ளிகளிலும் நூலகத்தை பராமரிக்க சிறப்பு ஆசிரியர் ஒருவரை பணியில் ஈடுபடுத்த வேண்டும். மேலும், வழக்கமான பாடங்கள் பாதிக்காத வகையில், வாரத்துக்கு இரண்டு பாடவேளைகளை ஒதுக்கி நூலகத்துக்கு மாணவர்கள் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். அதோடு, அருகில் உள்ள மாவட்ட நூலகம் அல்லது கிளை நூலகங்களுக்கு மாணவர்களை அழைத்து சென்று பார்வையிட வேண்டும்.

மேலும், நூலகங்களில் மாணவர்கள் படித்த புத்தகங்கள் குறித்து, காலையில் நடைபெறும் பள்ளி இறைவணக்க கூட்டத்தில் மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். நூலகங்களை மாணவர்கள் பயன்படுத்தும் போது, எதிர்பாராதவிதமாக புத்தகங்கள் சேதமடைந்தால் அதற்கான தொகையை மாணவர்களிடம் வசூலிக்கக் கூடாது. பள்ளியின் முன்னாள் மாணவர்கள், தன்னார்வ அமைப்புகளின் பங்களிப்புடன் நூலகங்களை மேம்படுத்தவும், புதிய நூல்களை பெறுவதற்கும் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED தேசிய சாலை பாதுகாப்பு வார விழா...