திருச்சி வங்கியில் ரூ.16 லட்சம் அபேஸ் மர்ம ஆசாமியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல் சிசிடிவி கேமராவில் காட்சி தெளிவில்லை

திருச்சி, ஆக.22: திருச்சி வங்கியில் இருந்து ரூ.16 லட்சம் ரொக்கப்பணத்தை அபேஸ் செய்து சென்ற சம்பவத்தில் வங்கி கேமரா காட்சிகள் தெளிவாக இல்லாததால் மர்ம நபரை பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மும்பையை தலைமையிடமாக கொண்டு லார்ஜ்கேஸ் என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் இண்ட்கேஸ் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும் ஒப்பந்தம் பெற்றுள்ளது. திருச்சியில் இதன் கிளை அலுவலகம் கரூர் பைபாஸ் சாலையில் உள்ளது. முசிறியை சேர்ந்த சரவணன் (35), கீழஅம்பிகாபுரம் அருண்(32) ஆகியோர் இந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். இவர்கள் வங்கியில் பணம் எடுத்து அதனை ஏடிஎம் மையத்தில் நிரப்பி வருகின்றனர். சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் வங்கியில் நேற்றுமுன்தினம் மதியம் 1.30 மணி அளவில் ஏடிஎம் மையத்தில் பணம் வைப்பதற்காக ரூ.34.50 லட்சம் எடுத்தனர். எடுத்த பணத்தை ஒரு பேக்கில் ரூ.16 லட்சம் மற்றொரு பேக்கில் ரூ.18.50 லட்சம் என வைத்தனர். ரூ.16 லட்சம் இருந்த பேக்குடன் கேஸ் கவுண்டர் எதிரே இருந்த சேரில் சரவணன் அமர்ந்திருந்தார்.

அருண் என்பவர் கேஷியரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது வங்கி கேஷியரிடம் சலான் வாங்குவதற்காக கையில் வைத்து இருந்த பேக்கை இருக்கையில் வைத்துவிட்டு சரவணன் எழுந்து சென்றார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்தபோது இருக்கையில் வைத்திருந்த பேக் மாயமாகி இருந்தது தெரியவந்தது. வங்கி முழுவதும் தேடிப்பார்த்தும் பேக் சிக்கவில்லை. இவர்கள் பணம் வைத்திருப்பதை நேட்டமிட்ட மர்ம நபர், அந்த பேக்கை எடுத்து சென்றுவிட்டார். இதனால் வங்கியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. உயர் அதிகாரிகள் அங்கு வந்து வங்கியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த கேமரா பழைய வகையை சேர்ந்தது என்பதால் பணம் எடுத்து சென்றவரின் உருவம் துல்லியமாக தெரியவில்லை. நெகட்டிவ் போல கறுப்பாக தெரிந்தது. இதில் பேண்ட், சர்ட் அணிந்து 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்த பேக்கை எடுத்து செல்கிறார். கேமரா தெளிவாக தெரியாதால் மர்ம நபரை கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே அந்த வங்கி அமைந்துள்ள வீதியில் போலீசார் வைத்திருந்த காமிராவை ஆய்வு செய்தபோது அந்த கேமரா முதல்நாள் பெய்த மழையில் பழுதாகிபோய் இருந்தது. எனவே அதன் மூலமும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே வேறு வர்த்தக நிறுவனங்களில் உள்ள கேமராக்களின் பதிவுகளை வாங்கி ஆய்வு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அடுத்த கட்டமாக மதியம் 1 முதல் 2 மணி வரை வங்கியின் உள்ளே மற்றும் வெளியே செல்போனில் யார் யார் பேசி உள்ளனர். யாரிடம் தொடர்பு கொண்டனர். என்னென்ன பேசினார்கள் என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். அந்த நேரத்தில் பல்லாயிரம் பேர் பேசியிருக்கலாம். அதில் குற்றவாளி பேசியிருக்கிறானா என்பதை கண்டறியும் பணியும் தொடங்கியுள்ளது. இதில் குற்றவாளி சிக்குவானா என்ற எதிர்பார்ப்பில் போலீசார் உள்ளனர். அதே நேரம் இதுபோல பணம் அபேஸ் செய்யும் பழைய குற்றவாளிகளின் நடமாட்டம் இப்போது திருச்சியில் உள்ளதா, யார், யார் இப்படி அபேஸ் செய்வதில் கில்லாடி என்ற பட்டியலும் தயாரிக்கப்பட்டு குற்றவாளியை அடையாளம் காணும் வேலை துவங்கி உள்ளது. அதே நேரத்தில் குற்றவாளி தனியாக வந்திருக்க வாய்ப்பில்லை. வெளியில் யாரும் பைக் அல்லது காரில் நின்றிருப்பார்கள். அதில்தான் தப்பியிருக்கவேண்டும் என்ற கோணத்திலும் போலீசார் துப்புதுலக்குகிறார்கள். இதுவரை எந்த தடயமும் இல்லாததால் போலீசார் திணறி வருகிறார்கள்.

Related Stories: