இன்டர்நெட் இல்லையெனில் நவீன சமுதாயத்திற்குள் நாம் வர முடியாது அமைச்சர் உதயகுமார் பேச்சு

திருச்சி, ஆக.22: திருச்சி மாவட்டத்தில் தகவல் அறிவியல் பயன்பாடு ஆராய்ச்சிக்கான மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. மின்னாளுமை ஆணையர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சந்தோஷ் கே.மிஸ்ரா, தகவல் தொழில்நுட்பவியல் துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்தோஷ்பாபு, திருச்சி கலெக்டர் சிவராசு, முசிறி எம்எல்ஏ செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயகுமார் மையத்தை திறந்து வைத்து, தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது: இ-சேவை முறையை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்துடன் தமிழக அரசின் இ-சேவை மையம், தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் இ-சேவை மையங்களில் பொது நிர்வாகம், வருவாய், சமூக பாதுகாப்பு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை துரிதப்படுத்தவும், மக்களுக்கு சேவைகளை விரைந்து வழங்கவும் முடியும். வருவாய்த்துறையுடன் தகவல் தொழில்நுட்பம் இணையும்போது மேலும் பல வளர்ச்சிகளை தமிழ்நாடு அடையும்.

இ-சேவை மையங்களில் ஏற்பட்டுள்ள குறைகளை களைவதற்கான திட்டம்தான் இந்த ஒப்பந்தம். நிர்வாகம், மக்கள் தொகை, பூலோக அடிப்படையில் மாவட்டங்களின் மக்களின் கோரிக்கை ஏற்று, அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும். தற்போது தமிழகத்தில் 85 புதிய தாலுகாக்கள், 11 புதிய கோட்டங்கள், 5 புதிய மாவட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. எந்த பிரச்னைக்கும் தீர்வு வேண்டும் என்ற நோக்கில் 700 கோடி மக்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு இந்த கருத்தரங்கு மூலம் தொழில்நுட்ப உதவி ஏற்படும். வருங்காலங்களில் உணவு, உடை, இருப்பிடத்துடன் இன்டர்நெட் வசதியும் வேண்டும். அது இல்லை என்றால் கண்ணிருந்தும் குருடர்கள் போல்தான். எனவே, இன்டர்நெட் இல்லை எனில் நவீன சமுதாயத்திற்குள் நாம் வர முடியாது. ஒரே நேரத்தில் 2 லட்சம் நபருக்கு சேவை வழங்கும் நிலையில் 25 லட்சம் பேர் இந்த சேவையை பயன்படுத்துகிறார்கள். எனவே, காலதாமதம் ஏற்படுகின்றது. இவற்றை களைவதற்கு தான் இந்திய மேலாண்மை கழகத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது’ என்றார். அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், ‘வரும் காலத்தில் திருச்சி ஐஐஎம் சமுதாய சேவைகளின் அடிப்படையில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறும்’ என்றார். அமைச்சர் வளர்மதி, இந்திய மேலாண்மை கழக இயக்குநர் பீமராய மெட்ரி உட்பட பலர் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

Related Stories: