கந்துவட்டி கொடுமை சலூன் கடைக்காரர் தீக்குளிப்பு

திருவெறும்பூர், ஆக.22: திருவெறும்பூர் அருகே வட்டிக்கு கடன் கொடுத்தவர் மிரட்டியதால் சலூன் கடை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதையொட்டி வட்டிக்கு பணம் கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருவெறும்பூர் அடுத்த நவல்பட்டு அண்ணாநரை சேர்ந்தவர் முருகேசன்(40). இவர் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். முருகேசன் நவல்பட்டு மற்றும் துவாக்குடியில் இருப்பவர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். அப்படி வாங்கிய பணத்தை முருகேசனால் கொடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் வட்டிக்கு மேல் வட்டி போட்டு கந்துவட்டி அடிப்படையில் பணத்தை திருப்பிக்கேட்டு, முருகேசனை மிரட்டி உள்ளனர். இதில், துவாக்குடி தெற்கு மலையை சேர்ந்த சுரேஷ் என்பவரும், முருகேசனுக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். அவர் நேற்று காலை முருகேசனிடம் வட்டிக்கு கொடுத்த பணத்தை கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு மிரட்டியதால் மனமுடைந்த முருகேசன் நேற்று காலை தனது உடலில் பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் முருகேசனை காப்பாற்றி துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: