×

காரியாபட்டியில் போதிய வடிகால் வசதி இல்லாமல் அரசு பள்ளி முன் தேங்கும் மழைநீர் வளாகத்தில் புகுவதால் மாணவிகள் அவதி


காரியாபட்டி, ஆக.22: காரியாபட்டியில் முறையான வடிகால் வசதியில்லாமல், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன், மதுரை-தூத்துக்குடி சாலையில் மழைநீர் குளம்போல தேங்கி பள்ளி வளாகத்தில் புகுகிறது. இதனால், வாகன ஓட்டிகளும், ஆசிரியர்கள், மாணவிகள் அவதிப்படுகின்றனர். காரியாபட்டியில் மதுரை-தூத்துக்குடி மெயின்ரோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பகுதியில் முறையான வடிகால் வசதியில்லாமல் மழை காலங்களில் மழைநீர் மற்றும் கழிவுநீர் பள்ளி முன் தேங்குகிறது. இதனால், வாகன ஓட்டிகளும், ஆசிரியர்களும், மாணவிகளும் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். மழை காலங்களில் மெயின் ரோட்டில் சேகரமாகும் மழைநீரும், வாறுகாலில் வரும் கழிவுநீரும் அரசு பெண்கள் பள்ளி, யூனியன் அலுவலகம் பின்புறம் உள்ள வாறுகால் வழியாகச் செல்கிறது. இந்த வாறுகாலில் மதுரை-தூத்துக்குடி செல்லும் மெயின்  ரோட்டில் இடையில் பாலம் ஒன்று கட்டப்பட்டு, மழைநீரும் கழிவுநீரும் செல்கிறது. இந்த பாலம் மிகவும் குறுகியதாக இருப்பதால், மழை காலங்களில் கழிவுநீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

இந்நிலையில், காரியாபட்டியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால், நகரில் உள்ள 11, 12, 13வது வார்டு பகுதிகள் மற்றும் மதுரை தூத்துக்குடி மெயின்ரோட்டில் பஸ்நிலையம் முன்புறம் இருந்து, அரசு பெண்கள் பள்ளி மற்றும் முக்குரோடு வரை மழைநீருடன் கழிவுநீரும் குளம்போல தேங்கியது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துர்நாற்றத்தால் கடைக்காரர்கள், நடந்துசெல்வோர் மூக்கை பிடித்து செல்கின்றனர். மேலும், அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் மழைநீரும், கழிவுநீரும் புகுந்து தேங்கியுள்ளது. இதனால், மாணவிகள், ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர். கடந்த முப்பதாண்டு காலமாக இந்த பிரச்னை உள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.  எனவே, ரோட்டில் உள்ள பாலத்தை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறையும், வாறுகாலை தூர்வாருவதற்கு பேரூராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.   பள்ளி தலைமை ஆசிரியை சண்முகத்தாய் கூறுகையில், ‘மழை காலங்களில் பள்ளி வளாகத்தில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்குகிறது. இரண்டு லோடு கிராவல் மண் அடித்து தரைத்தளத்தை உயர்த்தினோம். இருந்தும் சரியாகவில்லை. நேற்று பெய்த மழையால், பள்ளி வளாகத்தில் மழைநீர் புகுந்துள்ளது. சீரமைக்க உயரதிகாரிளிடம் தெரிவித்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெற்றோர் ஆசிரியர் சங்கதலைவர் பழனி கூறுகையில், ‘பேரூராட்சி எல்கைக்கு உட்பட்ட பள்ளிகளில் பொதுப்பணித்துறை மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளியில் பேவர் பிளாக்கற்களை பதிக்க வேண்டும்.
மெயின் ரோட்டில் உள்ள பாலத்தை நெடுஞ்சாலைத்துறை பெரிதாக அமைக்க வேண்டும். பள்ளிக்கு பின் செல்லும் வாறுகாலை அடிக்கடி தூர்வார பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். டீக்கடைக்காரர் கந்தசாமி: மழை காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து கடைக்குள் புகுகிறது. துர்நாற்றம் வீசுவதால், வாகனங்களில் செல்வோர் மூக்கைப் பிடித்து செல்கின்றனர். மாணவிகள் தொற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சௌந்தரபாண்டியன்: டூவீலர் மெக்கானி கடை வைத்துள்ளேன். மழை காலங்களில் ரோட்டில் வாகனங்களில் செல்ல முடியவில்லை. கடைக்காரர்கள் 2 நாட்களுக்கு கடை நடத்த முடியவில்லை. வாறுகால் கழிவுநீரும் மழைநீரும் சேர்ந்து கடை முன் தேங்குகிறது. இது குறித்து பேரூராட்சிக்கு பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. 30 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு...