சிவகாசி அருகே தடுப்புச்சுவர் இல்லா தரைப்பாலம்

சிவகாசி, ஆக. 22: சிவகாசி அருகே, சரஸ்வதிபாளையத்தில் உள்ள தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் செல்கின்றனர். சிவகாசியிலிருந்து வெம்பக்கோட்டை செல்லும் சாலையில் சரஸ்வதிபாளையம் நகர் உள்ளது. இப்பகுதியில் உள்ள தட்டாவூரணி, கருமண்கோயில் பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் மற்றும் கழிவுநீர் மீனம்பட்டி கண்மாய்க்கு செல்கிறது. சரஸ்வதிபாளையம் அருகே, மழைநீர் சாலையை கடந்து செல்லும் வகையில், தரைப்பாலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த பாலம் தற்போது சேதமடைந்துள்ளது. பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை. வெம்பக்கோட்டை செல்லும் முக்கிய சாலையில் தரைப்பாலம் அமைந்துள்ளதால், தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள், இந்த பாலம் வழியாகச் சென்று வருகின்றன. சாலை வளைவில் தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த வளைவில் செண்பககுட்டி விநாயகர் கோயில் சுற்றுச்சுவர் உள்ளது. சிவகாசியில் இருந்து வரும் வாகனங்கள், சாலையின் திருப்பத்தில் கவனக்குறைவாக வரும்போது, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

மேலும் பாலத்தின் ஓரத்தில் கருவேலமரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் வெம்பக்கோட்டையில் இருந்து சிவகாசிக்கு வரும் வாகன ஓட்டிகள், தரைப்பாலத்தை பார்க்க முடிவதில்லை. இதனால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இரவு நேரங்களில் இப்பகுதியில் தெருவிளக்கு கிடையாது. இதனால், சாலையோரத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் எதிரே வரும் வாகனங்களை விலகி செல்லும்போது வாகனங்கள் பாலத்தில் அடிக்கடி கவிழ்ந்து விபத்தில் சிக்கி வருகின்றன.
இந்த தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கு, நெடுஞசாலைத்துறையிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. சித்துராஜபுரம், சசிநகர், அய்யனார் காலனி பகுதியில் இருந்து பள்ளி மாணவர்கள், சைக்கிளில் சிவகாசியில் உள்ள பள்ளிக்கு வந்து செல்கின்றனர். காலை, மாலை வேளைகளில் ஆட்டோ, வேன்களில் அதிகமான மாணவர்களை ஏற்றி கொண்டு பள்ளிகளுக்கு டிரிப் அடிக்கின்றனர். பாலத்தில் வாகனங்கள் கடந்து செல்லும்போது, அசுர வேகத்தில் செல்கின்றனர். பெரும் விபத்து ஏற்படும் முன், சிவகாசி அருகே உள்ள சரஸ்வதிபாளையம் தரைப்பாலத்தில், தடுப்புச்சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED தமிழக அரசிடம் வேலை கேட்டு இளைஞர்கள் கையெழுத்து இயக்கம்