சிவகாசியில் கிருதுமால் ஓடையை தூர்வார கோரிக்கை

சிவகாசி, ஆக. 22: சிவகாசியில் கிருதுமால் ஓடையை தூர்வாரி, கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி நகரில் சேகரமாகும் பெரும்பாலான கழிவுநீர் கிருதுமால் ஓடை வழியாக செல்கிறது. இந்த ஓடையை தூர்வாராததால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மழை காலங்களில் கழிவுநீர் செல்ல வழியின்றி தெருக்களில் குளம் போல் தேங்கி, வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவி வருகிறது. இந்நிலையில், நகரில் டெலிபோன் எக்சேஞ்ச் அலுவலகம் முன்புறம் உள்ள கிருதுமால் ஓடையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருத்தங்கல் ரோடு நாடார் லாட்ஜ் அருகில் உள்ள கிருதுமால் ஓடையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பாலங்களும் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலத்தில் கழிவுநீர் செல்லும் வகையில், நான்கு கண் பாலமாக அமைக்கப்பட்டது. தற்போது இந்த பாலங்கள் மண்மேவி தூர்ந்து கிடக்கிறது. பாலத்தின் உயரம் குறைந்ததால் மழை காலங்களில் பெருக்கெடுத்து வரும் கழிவுநீர் பாலத்தின் வழியாக செல்லாமல், சாலைகளிலும், தெருக்களிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், நகரில் பலத்த மழை பெய்தால் சாலை முழுவதும் கழிவுநீர் கலந்து மழைநீர் தேங்கி நிற்கும் அவலம் தொடர்கிறது. இச்சமயங்களில் சாலையில் செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கழிவுநீர் கலந்த மழை நீரில் செல்லும் அவலநிலை உள்ளது.  எனவே, கிருதுமால் ஓடையை தூர்வாரி, மண்மேவி கிடக்கும் பாலங்களை அகற்றிவிட்டு நெடுஞ்சாலைத்துறையினர் புதிய பாலங்களை கட்ட நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED நாட்டுநலப்பணி சிறப்பு முகாம்