பாலையம்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதியில்லாத ராஜீவ்நகர்

அருப்புக்கோட்டை, ஆக. 22: பாலையம்பட்டி ஊராட்சியில் உள்ள ராஜீவ் நகரில் போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். 2 மாதமாக குடிநீர் விநியோகம் இல்லை. சேதமடைந்த வாறுகால்களால் கழிவுநீர் தேங்குகிறது.
அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ஊராட்சியில் ராஜீவ் நகர் உள்ளது. இங்கு  1 முதல் 6 தெருக்கள் உள்ளன. 700க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நகர் உருவாகி 25 ஆண்டுகளாகியும் அடிப்படை வசதியில்லை. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இங்குள்ள மெயின் ஓடை தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதில், பன்றிகள் கும்மாளமிடுகின்றன. வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை ஓடையில்தான் கொட்டுகின்றனர். ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளன. ஓடையை தூர்வாரவும், தடுப்புச்சுவர்  கட்டவும், பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தெருக்களில் வாறுகால் முறையாக கட்டப்படவில்லை. ஒரு பகுதியில் உயர்ந்தும் மற்றொரு பகுதியில் தாழ்ந்தும் உள்ளது. இதனால், கழிவுநீர் தெருக்களில் ஓடுகிறது.

 ராஜீவ் நகர் 1வது தெருவில்  போடப்பட்டுள்ள பேவர் பிளாக்கற்கள் பதிக்கப்பட்ட சில நாட்களிலேயே பெயர்ந்துவிட்டன.  ஒரு பகுதியில் பதித்தும், மற்றொரு பகுதியில் பதிக்காமலும் உள்ளனர். துப்புரவு பணியாளர்கள் வருவதில்லை என கூறுகின்றனர். குப்பைகளை கொட்ட தொட்டி இல்லை. மேடான பகுதியாக இருப்பதால், குடிநீர் சரியாக வருவதில்லை.  2 மாதத்துக்கு மேலாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் இல்லை. போர்வெல்களில் தண்ணீர் இல்லை. தூர்ந்து கிடக்கிறது. குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ராஜீவ்நகர் 1, 2 தெருக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் கிடைக்க தனியாக பகிர்மான குழாய்கள் பதித்தும்,  புதிதாக கேட் வால்வு அமைக்கவும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்த பகுதியில் ஒரே ஒரு குடிநீர் தொட்டி உள்ளது.  அதுவும், தண்ணீர் இல்லாமல் காட்சிப்பொருளாக உள்ளது.  போதிய அடிபம்பு மினிபவர் பம்ப் அமைக்கப்படவில்லை.  இந்த பகுதியில் குடிநீர் மற்றும் வாறுகால் பிரச்னை முக்கிய பிரச்னையாக உள்ளது.  எனவே, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ராஜீவ் நகருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ஊதிய உயர்வு வழங்கக்கோரி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்