×

மூணாறு அருகே திடீர் பள்ளம்

மூணாறு, ஆக. 22: மூணாறு அருகே சந்தன்பாறை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பூப்பாறை முள்ளம்தடி என்ற இடத்தில் திடீரென ஏற்பட்ட பள்ளம் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மூணாறு அருகே அமைந்துள்ள பூப்பாறை அருகில் உள்ளது முள்ளம்தடி பகுதி. இது சந்தன்பாறை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியாகும். இப்பகுதியில் கடந்த நாட்களில் பெய்த கனமழை காரணமாக திடீரென பள்ளம் ஏற்பட்டது. முதலில் சிறிய பள்ளமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக பள்ளம் மேலும் பெரிதாகி இடியும் நிலையில் உள்ளது. பள்ளம் அமைந்துள்ள பகுதிக்கு கீழ் பகுதியில் ஏரளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மேலும் மழை பெய்யும் பட்சத்தில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக புவியில் ஆராய்ச்சியாளர்கள் இந்த இடத்தை பரிசோதித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சந்தன்பாறை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் லீஜூ வர்கிஸ் கூறுகையில், ‘பள்ளம் உருவான இடத்திற்கு கீழ் பகுதியில் முள்ளம்தடி பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏரளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். முதலில் சிறியதாக காணப்பட்ட பள்ளம் தற்போது பெரிய பள்ளமாக மாறியுள்ளது. மேலும் கனமழை பெய்யும் பட்சத்தில் மழைநீர் பள்ளத்தில் இறங்கி மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது சம்பந்தமாக உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...