விதைப்பண்ணை அமைத்தால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம்

சிவகங்கை, ஆக.22: சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் விதைப்பண்ணை அமைத்து இரட்டிப்பு லாபம் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை விதைச்சான்று உதவி இயக்குநர் சாந்தி விடுத்துள்ள அறிக்கையில். சிவகங்கை மாவட்டத்தில் நெல் விதைப்பண்ணை அமைப்பதற்கு தேவையான கருவிதை, ஆதாரநிலை மற்றும் சான்றுநிலை நெல் விதைகளை தங்கள் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பெற்றிடலாம். கோ 51, அண்ணா(ஆர்) 4, டிகேஎம்(13), என்எல்ஆர் 34449, ஜேஜிஎல் 1798 போன்ற மத்திய கால விதை ரகங்களை தேர்வு செய்யலாம். விதைகள் வாங்கும் போது காலாவதி தேதி பார்த்து வாங்க வேண்டும். விற்பனை ரசீது மற்றும் சான்றட்டைகள் பாதுகாப்பாக வைக்கவும். விதைப்பண்ணைகளை சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநர் மூலமாக பதிவு செய்திடல் வேண்டும். விதைப்பண்ணை அமைக்க விதைச்சான்று கட்டணமாக ரூ.25ம் வயலாய்வு கட்டணமாக ரூ.60ம் விதை பரிசோதனை கட்டணமாக ரூ.30ம் செலுத்த வேண்டும். விதைத்த 35ம் நாள் அல்லது பயிர் பூப்பதற்கு 15 நாட்கள் முன்பு இதில் எது முன்னதோ அதற்குள் பதிவு செய்ய வேண்டும்.

விதைப்பண்ணையில் இரு வேறுபகுதிகள் 50 மீட்டர்களுக்கு அதிக இடைவெளியில் இருந்தாலோ, விதைப்புநாள் ஏழு நாட்களுக்குமேல் வித்தியாசப்பட்டாலோ தனித்தனியே பதிவு செய்ய வேண்டும்.  பதிவு செய்த விதைப்பண்ணைகளில் உரிய காலங்களில் வயலாய்வு மேற்கொள்ளப்பட்டு கலவன் ரகம் அகற்றப்பட்டு வளர்ச்சி கண்காணிக்கப்படுவதால் மகசூல் இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கலவன் அற்ற இனத்தூய்மை உள்ள விதைப்பண்ணையில் இருந்து கொள்முதல் செய்யப்படும் விதைகளுக்கு தமிழக அரசு பிரிமியம், கொள்முதல் மற்றும் விற்பனை மானியம் வழங்குகின்றது. எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இரட்டிப்பு லாபம் பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED நண்பரை கொலை செய்த இருவருக்கு 7ஆண்டு சிறை