×

தொண்டி பகுதியில் போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

தொண்டி, ஆக.22:  தொண்டியில் போக்குவரத்து பணிமனையை உடனே அமைக்க வலியுறுத்தி ராமநாதபுரம் எம்பியிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் முக்கிய நகரமாகும். இப்பேரூராட்சியை மையமாக வைத்து 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் உள்ளது. இங்கிருந்து சென்னை, பெங்களுர், மதுரை திருச்சி என அனைத்து பகுதிக்கும் பேருந்து செல்கிறது. ஆனால் இரவு நேரத்தில் திருவாடானையில் இருந்து தொண்டி வருவதற்கு எவ்வித வசதியும் இல்லை. குறிப்பிட்ட சில மணி நேரங்களில் மட்டுமே பஸ் உள்ளது.
இது இப்பகுதி மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. குடும்பத்துடன் வருபவர்களும், தனியாக வரும் பெண்களும் இரவு நேரத்தில் ஒருவித அச்சத்துடன் காத்திருக்கின்றனர்.

இதனால் தொண்டி பகுதியில் போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என்று அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரையிலும் மனு கொடுத்தும் எவ்வித பயனும் இல்லை. ஒவ்வொரு முறையும் இதுகுறித்து பரிசீலிப்பதாக மட்டுமே பதில் தருகின்றனர். பொது மக்களின் நலன் கருதி உடனடியாக இப்பகுதியில் போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும். நேற்று தொண்டி வட்டார மக்கள் சார்பில் எம்பி நவாஸ்கனியிடம் மனு கொடுக்கப்பட்டது. மேலும் ரயில் போக்குவரத்து குறித்தும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து அகமது பாய்ஸ் கூறியது, ‘‘இரவு நேரங்களில் திருவாடானை வரை வரும் பஸ் மீண்டும் தேவகோட்டை திரும்பி சென்று விடுகிறது. இதனால் டீசல் செலவும் அதிகமாகிறது. அதனால் தொண்டியில் போக்குவரத்து பணிமனை அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. அரசியல் காரணங்களால் அது தள்ளி போய் கொண்டிருக்கிறது. பணிமனை அமைக்க ஒதுக்கப்பட்ட இடம் அதிகாரியால் நீர்நிலை பகுதி என சொல்லப்பட்ட பகுதியில் இன்று தனியார் பட்டா நிலமாக மாறி கொண்டிருக்கிறது.
அதிகாரிகள் பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு இப்பகுதியில் போக்குவரத்து பணிமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொண்டி வழியாக ராமநாதபுரத்திற்கு ரயில் போக்குவரத்திற்கும் மனு கொடுத்துள்ளோம்’’என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை