×

நண்டு ஏற்றுமதி ஆண்டுக்கு ரூ.350 கோடி மீன்வளத்துறை துணை இயக்குனர் தகவல்

ராமநாதபுரம், ஆக.22:  பாக்ஜலசந்தியில் நீல நண்டுகளின் பாதுகாப்பு மேம்பாடு பற்றி கருத்துப்பட்டறை மற்றும் செயல் திட்ட வெளியீடு நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் பாக்ஜலசந்தி நண்டு சதை பதப்படுத்துவோர் சங்கத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. சங்க தலைவர் சனில்குமார் வரவேற்றார். மீன்வளத்துறை இணை இயக்குனர்கள் தூத்துக்குடி சந்திரா, நாகபட்டிணம் அமல்சே வியர், ராமநாதபுரம்  துணை இயக்குனர் காத்தவராயன் கருத்துரை வழங்கினர். இதில் துணை இயக்குனர் காத்தவராயன் பேசுகையில், தமிழகத்தில் பாக்ஜலசந்தி மன்னார் வளைகுடா பகுதிகளில் நீலகால் நண்டுகள் அதிகளவில் காணப்படுகின்றன. மற்ற நண்டுகளை விட சுவை அதிகமுள்ளது. நண்டு உஷ்ண உணவு என்பதால் இதன் சதைப்பகுதி அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதில் பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் மட்டும் நாள் ஒன்றுக்கு 35 டன் அளவில் நண்டுகள் பிடிக்கப்படுகிறது. நண்டு பிடித்தல் தொழில் மூலம் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் மறைமுகமாகவோ, நேரடியாகவோ பயனடைகின்றனர். நாட்டில் ஆண்டுக்கு 17 ஆயிரம் டன் அளவில் நண்டுகள் ஏற்றுமதி நடக்கும் நிலையில், 20 சதவீதம் குஜராத் மாநிலத்திலிருந்தும், 10 சதவீதம் மற்ற மாநிலங்களிலிருந்தும், தமிழகத்திலிருந்து மட்டும் 70 சதவீத ஏற்றுமதி நடக்கிறது. இந்திய அளவில் 9 நண்டு ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 6 நிறுவனங்கள் செயல்படுகிறது. இதில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 4 நிறுவனங்களும், கன்னியாகுமரி, திண்டிவனம் பகுதிகளில் தலா  ஒரு நிறுவனமும் செயல்படுகிறது.
தமிழகத்தில் ஆண்டுக்கு 11 ஆயிரம் டன் நண்டின் சதைப்பகுதி அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஆண்டு வருமானம் ரூ.350 கோடி அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது.

இந்நிறுவனங்களில் முழு நண்டுகளாகவும், நண்டுகளை வெட்டியும், சதை பகுதிகளை மட்டும் பிரித்து எடுத்து என பல நிலைகளில் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்கின்றன. இதில் 80 சதவீதம் அமெரிக்காவிற்கும், தலா 10 சதவீதம் பிறநாடுகளுக்கும், உள்நாட்டிலும் ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது என்றார். கருத்தரங்கில் சீனை நண்டுகள், 90 மீ.மி. அளவுக்கு கீழே உள்ள நண்டுகளை பிடிக்க கூடாது, நண்டு கிடைப்பது மாதிரியான வலைகளை உபயோகபடுத்த வேண்டும் என மீனவ பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏராளமான நண்டுகள் பதப்படுத்துவோர் சங்க பிரதிநிதிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை