வடக்கு தாலுகாவிலிருந்து சமயநல்லூர் கிராமத்தை ஒரு போதும் பிரிக்க கூடாது

வாடிப்பட்டி, ஆக. 22: மதுரை வடக்கு தாலுகாவிலிருந்து சமயநல்லூர் கிராமத்திலிருந்து பிரித்து அலங்காநல்லூரில் இணைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் மதுரை அருகே  சமயநல்லூர் உள்ளது. ஊராட்சியாக விளங்கும் இப்பகுதி முன்பு சமயநல்லூர் தனி சட்டமன்றத் தொகுதியாக இருந்தது. கடந்த 2006ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் சமயநல்லூர் தனித்தொகுதி கலைக்கப்பட்டு சமயநல்லூர் மற்றும் அருகிலுள்ள சில கிராமங்கள் சோழவந்தான் தொகுதியுடன் இணைக்கப்பட்டு சோழவந்தான் தனித்தொகுதியாக மாற்றப்பட்டது. இதனால் தொகுதியை பறிகொடுத்த ஏமாற்றத்தில் இப்பகுதி மக்கள் இருக்கும் நிலையில் தற்போது மதுரை வடக்கு தாலுகா கட்டுப்பாட்டில் உள்ள சமயநல்லூர், தோடநேரி உள்ளிட்ட சுமார் 10 கிராமங்களை அத்தாலுகாவிலிருந்து பிரித்து அலங்காநல்லூருக்கென புதிய தாலுகா ஒன்றை உருவாக்கி அதனுடன் இணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

Advertising
Advertising

இது இப்பகுதி மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு தாலுகா என்பது மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ளதால் இப்பகுதி மக்கள் தங்களது வருவாய்துறை சம்பந்தப்பட்ட பணிகளுக்கு செல்ல போக்குவரத்திற்கு எளிதாக உள்ளது. ஆனால், அலங்காநல்லூர் தாலுகாவில் தங்கள் கிராமத்தை இணைத்தால் வருவாய்துறை சம்பந்தப்பட்ட பணிகளுக்காக அலங்காநல்லூர் செல்ல போதுமான போக்குவரத்து வசதி இல்லை என்று கூறுகின்றனர். எனவே, தங்கள் கிராமங்களை எப்போதும் போல் மதுரை வடக்குத் தாலுகாவிலேயே தொடர  வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இப்பிரச்னை தொடர்பாக அனைத்து கட்சி மற்றும் கிராமமக்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்துள்ள சமயநல்லூர் பகுதி மக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமயநல்லூரை சேர்ந்த வீரக்குமார் கூறுகையில், சமயநல்லூர் வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. எங்கள் கிராமம் வடக்குத் தாலுகாவில் உள்ளதால் அனைத்து வருவாய் பணிகளுக்கும் 12 கி.மீ தொலைவில் உள்ள மதுரைக்கு எளிதில் செல்ல முடிகிறது. ஆனால், எங்கள் கிராமத்தை பிரித்து அலங்காநல்லூரில் இணைத்தால் நாங்கள் அங்கு செல்வதற்கு இங்கிருந்து ஆலமரம் சென்று அங்கிருந்து வேறு ஒரு பஸ்சில் அலங்காநல்லூர் என பல பஸ்கள் மாறி செல்ல வேண்டியிருக்கும். அதிலும் பெண்கள் தாலுகா அலுவலகம் செல்ல மிகுந்த சிரமத்திற்குள்ளாவார்கள். எனவே சமயநல்லூர் கிராமம் எப்போதும் போல மதுரை வடக்குத் தாலுகா கட்டுப்பாட்டில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories: