சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை தயாரிப்பு திருமங்கலத்தில் தீவிரம்

திருமங்கலம், ஆக.22: விநாயகர் சதுர்த்தியையொட்டி திருமங்கலத்தில் வடமாநில கலைஞர்கள் கைவண்ணத்தில் பல்வேறு வடிவ விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. செப்.2ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பெரிய வடிவிலான விநாயகர் சிலைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபடுவது வழக்கம். இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி வடமாநில கலைஞர்கள் திருமங்கலத்தில் பிரம்மாண்ட விநாயகர்சிலை வடிவமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களான விருதுநகர், தேனி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பக்தர்கள் வைத்து வழிபாடு செய்ய விநாயகர் சிலைகள் ஆர்டர் கொடுக்கப்படுள்ளது. ஒரு அடியிலிருந்து 12 அடிவரை சிலைகள் இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. எளிதில் தண்ணீரில் கரையும் வகையில் இந்த சிலைகளை வடிவமைப்பதாக சிலைகளை செய்துவரும் சங்கர் தெரிவித்தார்.

லிங்க வடிவிலான விநாயகர், நர்த்தன விநாயகர், மகாகணபதி, கற்பகவிநாயகர், வீணை வாசிக்கும் விநாயகர், நான்கு தலை விநாயகர் உள்ளிட்ட விநாயகர்கள் தயாராகி வருகின்றன. இது தவிர விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வீடுகளில் பக்தர்கள் வைத்து வழிபடும் சிறிய வடிவ விநாயகர்களும் இங்கு தயாரிக்கப்படுகின்றன. கடந்த ஒரு மாதகாலமாக இரவு, பகலாக சிலைகள் தயாரிப்பு பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 500 ரூபாய் முதல் 17 ஆயிரம் ரூபாய் வரையிலான விநாயகர் சிலைகள் இங்கு வடிவமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவிற்கும் இங்கிருந்து ஆர்டர்கள் பெயரில் அனுப்பிவைக்கிறோம்’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: