×

கால்நடைகளை மழையில் நனைய விட வேண்டாம்

திண்டுக்கல், ஆக. 22: திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனர் முருகன் ஆலோசனையின்பேரில், உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் வழிகாட்டுதல்படி திண்டுக்கல் அருகே தண்ணீர் பந்தம்பட்டியில் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடந்தது. முகாமில் கால்நடைகளுக்கு மலடு நீக்கம், குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. கால்நடை வளர்ப்போரிடம் டாக்டர் சேகர் பேசியதாவது, ‘கால்நடைகள் நமது செல்வம் என்பதை உணர்ந்து நாம் அவற்றிற்கு தேவையானவற்றை செய்ய வேண்டும். கோமாரி நோய் தடுப்பூசிகள் கட்டாயம் போட வேண்டும். ஒரு நாளைக்கு 3 முறை தண்ணீர் வைக்க வேண்டும். மழையில் நனைய விடக்கூடாது. கால்நடைகள் கட்டி இருக்கும் இடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் நோய்கள் தாக்காது. மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு காய்ச்சல் போன்ற பல நோய்கள் ஏற்படும், அந்த நேரத்தில் கால்நடைகளை மருத்துவமனைக்கு உடனே கொண்டு வந்து ஊசிகளை போட வேண்டும்.

குடல் புழுக்களை நீக்க வேண்டும். அப்போதுதான் கால்நடைகள் நன்றாக தீவனங்களை எடுத்து கொள்ளும், சினை ஊசிகள் தொடர்ந்து போடப்பட்டு வருகிறது, இதுபோலான முகாம்களை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என்றார். இதில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் அமராவதி உள்பட பலர் பங்கேற்றனர். நத்தம் அருகே புதுப்பட்டியில் கால்நடை பாதுகாப்பு திட்ட முகாமில் குட்டுப்பட்டி கால்நடை மருத்துவமனை டாக்டர் சுபலட்சுமி தலைமையில் ஆய்வாளர் கணேசன் உள்ளிட்டோர் சிகிச்சையளித்தனர். முகாமில் கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை போன்றவைகளும், குடற்புழு நீக்க மருந்துகளும் வழங்கப்பட்டன. மேலும் சினை பிடிப்பதற்கு கால்நடைகளுக்கு தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கன்று பேரணி நடத்தப்பட்டு சிறந்த முதல் 3 கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...