பழநி அருகே அகோபில வரதராஜ பெருமாள் கோயில் ஆவணி பிரமோற்சவ விழா செப் 8ல் கொடியேற்றத்துடன் துவக்கம்

பழநி, ஆக. 22: பழநி அருகே பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலின் ஆவணி பிரமோற்சவ விழா வரும் செப்.8ம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. பழநி அருகே பாலசமுத்திரத்தில் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி பிரமோற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்படும். 11 நாட்கள் நடைபெறும் இவ்விழா வரும் வரும் செப்டம்பர் 8ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அன்று காலை 7.46 மணிக்கு மேல் 8.46 மணிக்குள் கன்யா லக்னத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருவிழா நடைபெறும் 11 நாட்களும் சாமி சப்பரம், அனுமார் வாகனம், சிம்ம வாகனம், கருடன் வாகனம், அன்ன வாகனம், குதிரை வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் செப்.14ம் தேதி நடக்க உள்ளது. அன்றைய தினம் மாலை 6.43 மணிக்கு மேல் 7.43 மணிக்குள் மீன லக்னத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்க உள்ளது. செப்.15ம் தேதி இரவு பாரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செப்.16ம் தேதி நடக்க உள்ளது.  அன்றைய தினம் காலை 9 மணிக்கு துலா லக்னத்தில் தேரோட்ட நிகழ்ச்சி நடக்க உள்ளது. செப்.17ம் தேதி இரவு கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது.

செப்.18ம் தேதி மாலை விடையாற்றி உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. விழா நடைபெறும் 11 நாட்களும் கோயில் வளாகத்தில் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு, பாசுரங்கள் சேவித்தல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED திண்டுக்கல், பழநியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்