தகவல் உரிமையில் பதில் தராவிட்டால் நடவடிக்கை

திண்டுக்கல், ஆக. 22: தகவல் உரிமை பெறும் சட்டப்படி பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு பதில் தராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தகவல் ஆணையர் முருகன் எச்சரித்துள்ளார். திண்டுக்கல்லில் தகவல் பெறும் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாநில தகவல் ஆணையர் முருகன் கலந்து கொண்டு பேசுகையில், ‘திண்டுக்கல் மாவட்டத்தில் பலர் தகவல் உரிமை சட்டத்தில் தகவல் கேட்டுள்ளனர். ஆனால் பதில் தராமல் இழுத்தடிப்பதாக புகார்கள் வருகின்றன. யார் என்ன தகவல் கேட்டாலும் நன்றாக ஆய்வு செய்து, விசாரித்து 30 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். பொதுமக்கள் கேட்கும் தகவல்களுக்கு பதில் தராவிட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிலர் சரியான பதிலை தருவதற்கு தாமதமானதால் 15 நாட்கள் எசடுத்து கொள்ளலாம்.

சிலவற்றிற்கு பதில் தர முடியாவிட்டால் பதில் தர முடியாத கேள்விகள் என எழுதி எங்களுக்கும், சம்பந்தப்பட்டவருக்கும் தகவல் தர வேண்டும். வேறு துறைகளில் இருந்து தகவல் பெறுவதாக இருந்தால் சிறிது தாமதமாகலாம். கேட்பவர்கள் நிலையில் இருந்து அலுவலர்கள் பார்க்க வேண்டும். சிலர் மனுவை வாங்கி கொண்டு எந்த பதிலும் தராமல் இருக்க கூடாது. அப்படி உள்ளவர்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளித்தால் நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம்’ என்றார். இதில் டிஆர்ஓ வேலு மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கொடைக்கானலில் முன்விரோதத்தில் டாக்ஸி...