நிலக்கோட்டை பஸ்நிலையம் முன்பு இடைவெளி இல்லா தடுப்பால் இடையூறு ‘கேப்’ விடப்படுமா?

வத்தலக்குண்டு, ஆக. 22: நிலக்கோட்டை பஸ்நிலையம் முன்பு சாலை தடுப்புச்சுவரில் இடைவெளி இல்லாததால் பஸ்கள் உள்ளே, சென்று வர முடியாமல் சிரமப்படுகின்றன. எனவே தடுப்புச்சுவரில் இடைவெளி விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  நிலக்கோட்டை பஸ்நிலைய பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சாலையை தலா 6 அடி வீதம் இருபுறமும் அகலப்படுத்தினர். அதன்பிறகு கடந்த மாதம் சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைத்தனர். அப்படி அமைக்கும் போது பஸ்நிலையம் முன்பு பஸ்கள் உள்ளே, வெளியே செல்வதற்கு இடைவெளி விடாமல் தடுப்புச்சுவர் அமைத்து அடைத்து விட்டனர். இதனால் வத்தலக்குண்டு ரோட்டில் இருந்து வரும் பஸ்கள் உள்ளே, வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றன.

மதுரை ரோட்டில் இருந்து வாகனங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் வெகுநேரம் காத்திருந்து பஸ்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இன்னும் சில பஸ்கள் பஸ்நிலையத்தை புறக்கணித்து சென்று வருகின்றன. இதனால் பயணிகள் பஸ்களை பிடிக்க அங்குமிங்கும் அலைய வேண்டியுள்ளது. மேலும் பஸ்நிலையம் கிரிக்கெட் மைதானம் போல் காலியாக கிடப்பதால் உள்ளே கடை வைத்துள்ளவர்களும் வியாபாரமின்றி நஷ்டமடைந்து வருகின்றனர். எனவே மற்ற ஊர்களை போல நிலக்கோட்டை பஸ்நிலையம் முன்புள்ள தடுப்புச்சுவரில் இடைவெளி விட வேண்டும் என பயணிகள், கடைக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: