வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு கிடங்கு அமைக்கும் இடத்தில் ஆய்வு

திருப்பூர், ஆக. 22: திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாக்குபதிவு இயந்திரங்களை வைப்பதற்காக கிடங்கு அமைக்கும் இடத்தை நேற்று சென்னை இணை தலைமை தேர்தல் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பேட் இயந்திரங்கள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைப்பதற்காக கிடங்கு கட்ட, திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை திருப்பூர் கலெக்டர் பழனிசாமி முன்னிலையில் சென்னை இணை தலைமை தேர்தல் அலுவலர் (தகவல் தொடர்பு) தீபக்ஜேகப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), சாகுல் ஹமீது, திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் செண்பகவள்ளி, தேர்தல் வட்டாட்சியர் முருகதாஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: