ஜல்சக்தி அபியான் திட்ட பணிகள் குறித்து மத்திய குழு அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர், ஆக.22:ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் நடைபெறும் பணிகளை மத்திய அரசு அதிகாரிகள் குழுவினர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். நாடு முழுவதும் நிலவும் தண்ணீர் பிரச்னையை சரி செய்யவும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும் மத்திய அரசு ஜல்சக்தி அபியான் என்ற திட்டத்தை உருவாக்கி உள்ளது. நாட்டில் 255 மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக 255 கூடுதல் மற்றும் இணை செயலாளர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. இவர்கள் அந்தந்த மாவட்டங்களில் பொறுப்பாளர்களாக இருந்து தண்ணீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்த உள்ளனர். மேலும் 255 மாவட்டங்களில் உள்ள 1,592 தாலுகா வாரியாக நீர்நிலைகள் கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், டெல்லியில் கடந்த ஜூலை 1ம் தேதி துவக்கப்பட்டது.

இதையடுத்து, ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்ய மத்திய அரசு அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுக்கள், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வந்து சென்றது. இக்குழு மாதந்தோறும் திடீர் ஆய்வு பணியை மேற்கொள்ளும் என அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு அதிகாரி ராம் கிருஷ்ணா ஸ்வாம்கர் தலைமையிலான குழுவினர் ேநற்று திருப்பூர் மாநகராட்சி 2வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சேடர்பாளையம் குட்டையில் நடந்த மராமத்து பணி, அரசு பள்ளி, தனியார் பள்ளி மற்றும் பனியன் நிறுவனங்கள் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பள்ளி மாணவர்களிடையே மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து விளக்கினர். இந்த ஆய்வின்போது, 2வது மண்டல உதவி ஆணையர் செல்வநாயகம், இளம் பொறியாளர் கணேஷ் செந்தில்குமார், 1வது மண்டல இளம்பொறியாளர் சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: