×

பழங்குடியினரின் வாழ்க்கையை சித்தரிக்கும் சுவர் ஓவியம்

ஊட்டி, ஆக. 22:ஊட்டி ரயில் நிலைய சுவற்றில் பழங்குடியினரின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் சுவர் ஓவியம் வரையும் பணி நடக்கிறது. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் மலை ரயிலில் பயணம் செய்யவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், எப்போதும் ஊட்டி மலை ரயிலில் டிக்கெட்டுக்கள் கிடைப்பது கடினம். முன்பதிவிலேயே டிக்கெட் அனைத்தும் தீர்ந்து போய்விடுகிறது. சில வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் பல லட்சம் செலவு செய்து சிறப்பு ரயிலையே வாடகைக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு எடுத்து வருகின்றனர். பாரம்பரிய அந்தஸ்து பெற்ற இந்த ரயில் மற்றும் ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தற்போது தென்னக ரயில்வே பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி ரயில் நிலையத்தில் தற்ேபாது வண்ண மிகவு ஓவியங்கள் வரையும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதில், நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் பல்வேறு ஓவியங்கள் வரையப்படவுள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடக்கிறது. ஓரிரு நாட்களில் இப்பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓவியங்கள் வரையும் பணிகள் முடிந்தாலே முழு அழகும் வெளியில் தெரியும். ரயில்வே நிலைய சுவர்களில் பல்வேறு வகையான ஓவியங்கள் வரைந்து வருவது சுற்றுலா பயணிகளையும், உள்ளூர் மக்களையும் கவர்ந்து வருகிறது.

Tags :
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி