×

கூடலூர்- கேரளா சாலையில் மழை பாதிப்புகளை சீரமைப்பதில் தாமதம்

கூடலூர், ஆக. 22:  நீலகிரி மாவட்டத்தில் இம்மாத துவக்கத்தில் பெய்த கனமழையால் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மன்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல் வீடுகள், விவசாய நிலங்களும் சேதமடைந்தன. குறிப்பாக கூடலூரில் இருந்து நாடு கானி, கீழ்நாடு காணி வழியாக கேரள மாநிலம் மலப்புரம், கள்ளிக்கோட்டை , திருச்சூர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு செல்லும் பிரதான சாலையில் பல இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து  போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தமிழக எல்லைய ஓட்டிய கேரள பகுதியில் சுமார் 5 கி.மீ., தூரத்துக்கு பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள், மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தது. அவை இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. தேன்பாறை என்ற இடத்தில் சுமார் 500 மீ., உயரத்தில் இருந்து மிகப் பெரிய அளவிலான  ஐம்பதுக்கும் மேற்பட்ட ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் சாலை முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு இடத்தில் 15 மீ., தூரத்துக்கு சாலை ஒரு மீ., அகலத்திற்கு கீழிறங்கியதால் இந்த சாலையில் மீண்டும் போக்குவரத்து துவங்க சுமார் மூன்று மாதங்கள் ஆகும் என அப்பகுதியை பார்வையிட்ட கேரள அமைச்சர்கள், அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.  தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் முக்கிய போக்குவரத்து சாலையாக உள்ள இந்த சாலையில் கடந்த 14 நாட்களாக போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் நாடுகாணி, தேவாலா, பந்தலூர், கூடலூர் பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், மருத்துவ தேவைகளுக்காக செல்லும் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலை சீரமைப்பு பணிகளில் கேரள அரசு தீவிரம் காட்டாததால் நேற்று வரை எந்த பணிகளும் நடைபெறவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. தமிழக பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் தற்போது 18 கி.மீ., தூரம் நடந்து பணியிடங்களுக்கு செல்லத்துவங்கியுள்ளனர்.

Tags :
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்