×

மாநிலம் முழுவதும் ரூ.1,250 கோடி செலவில் சிறுபாசன குளங்கள், குட்டை சீரமைக்கும் பணி

சூலூர்,ஆக.22: தமிழகம் முழுவதும் ரூ.1250 கோடி செலவில் சிறுபாசன குளங்கள்,குட்டைகள் சீரமைக்கும் பணி நடைபெற உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். சூலூர் தாலூகா கரையாம்பாளையம் பகுதியில் உள்ள குட்டையை தூர்வாரும் பணியினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று துவக்கி வைத்து பேசியதாவது: தமிழக முதல்வர்  சட்டப் பேரவையில் 110ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி அனைத்து மாவட்டங்களிலும்  உள்ள 5 ஆயிரம் சிறுபாசன குளங்கள் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும் 25 ஆயிரம் குட்டைகள் மற்றும் ஊரணிகளை தலா ஒரு லட்சம் மதிப்பிலும் தூர்வாரும் பணி கூடுதல் சிறப்பு நிதியிலிருந்து ரூ.500 கோடி செலவில் மேற்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களில் உள்ள 5 ஆயிரம் சிறுபாசன குளங்கள் தலா ரூ.5லட்சம் மதிப்பீட்டிலும் 25 ஆயிரம் குட்டைகள் மற்றும் ஊரணிகளை தலா ரூ.2லட்சம் மதிப்பிலும் நீர் உள்ளே வரும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் ரூ.750 கோடி செலவிலும் மொத்தமாக ரூ.1,250கோடி செலவில் சிறுபாசன குளங்கள், குட்டை மற்றும் ஊரணிகளில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தில் முதல் கட்டமாக 3 சிறுபாசன குளங்கள் மற்றும் 210 குட்டை, ஊரணிகள் தூர்வரும் பணிகள் ரூ.2.25 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் துவக்கமாக  சூலூர் வட்டாரம் மயிலம்பட்டி கிராம ஊராட்சியில் கரையாம்பாளையம் கிராமத்தில் குட்டை தூர்வாரும் பணிகள்  துவக்கி வைக்கப்படுவாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் ராசாமணி,சூலூர் எம்.எல்.ஏ.கந்தசாமி, சூலூர் தாசில்தார் மீனாகுமாரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு