ஈரோடு மாவட்டத்தில் ஆக.25ல் இரண்டாம் நிலை காவலர் தேர்வு

ஈரோடு, ஆக. 22:  ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் 4,617 பேர் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2019ம்ஆண்டிற்காக காவல், தீயணைப்பு மற்றும் சிறைத்துறை இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு வரும் 25ம் தேதி நடக்கிறது. ஈரோடு அருகே பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் ஆண்கள் 1,920 பேரும், பெருந்துறை வாய்க்கால்மேடு நந்தா கல்வி நிறுவனங்களில் ஆண்கள் 2,134 பேரும், பெண்கள் 563 பேரும் என 2 மையங்களில் 4,617 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு நுழைவுச்சீட்டு கொண்டு வராத விண்ணப்பதாரர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர் கொண்டு வரும் நுழைவுசீட்டில் புகைப்படம் இல்லை என்றால் புகைப்படம் ஒட்டி அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களிடம் சான்றொப்பம் மற்றும் முத்திரை பெற்றிருக்க வேண்டும்.

Advertising
Advertising

விண்ணப்பதாரர் 25ம் தேதி காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வர வேண்டும். சூட்கேஸ், பேக், புத்தகம், செல்போன், கால்குலேட்டர், புளூடூத் மற்றும் இதர எலெக்ட்ரானிக் பொருட்கள், விலை உயர்ந்த பொருட்கள் உள்ளே எடுத்து வர அனுமதியில்லை.அத்தியாவசிய பொருட்களை எடுத்து வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது பெற்றோர் அல்லது உடன் வந்தவர்களிடம் பொருட்களை ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பதாரர் விடைத்தாளில் பட்டை தீட்ட நீலம் அல்லது கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா கொண்டு வர வேண்டும். விண்ணப்பதாரர் தனது சேர்க்கை எண் மற்றும் வினாத்தாளின் வகையை எழுதி பட்டை தீட்ட வேண்டும். விண்ணப்பதாரர் தேவையில்லாத விபரங்களை விடைத்தாளில் எழுதக்கூடாது. ஓஎம்ஆர் விடைத்தாளை எக்காரணம் கொண்டும் மடிக்க கூடாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுதும்போது பேசவோ, சைகை புரியவோ கூடாது என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: