சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தில் மனுக்கள் பெறும் பணி 22ல் துவக்கம்

ஈரோடு, ஆக.22: முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தில் வரும் 22ம்தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் மனுக்கள் பெறும் பணி துவங்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தாலுகாவிலும் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகள், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகள் அளவிலும், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் பிற துறைகளை சார்ந்த ஒரு அலுவலர் குழு மூலம் நேரடியாக சென்று வரும் 22ம்தேதி முதல் மனுக்களை பெறும் பணி துவக்க உள்ளது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட துறைக்கு ஒருவாரத்திற்குள் அனுப்பப்படும். அதன் மீது ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்படும்.

Advertising
Advertising

மனு மீதான தீர்விற்கு பின் செப்டம்பர் மாத இறுதியில் பல்வேறு நலத்திட்ட பயன்கள் மனுதாரருக்கு வழங்கப்படும். அடிப்படை தேவைகளான சாலை வசதி, தெருவிளக்கு வசதி, மருத்துவம் மற்றும் சுகாதார வசதி, குடிநீர் வசதி போன்ற போன்றவை தொடர்பாகவும் உரிய தீர்வு காணப்படும்.

மனுக்கள் பெறப்படும் இடம், நேரம் ஆகியவை அடங்கிய பட்டியல் கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி, அனைத்து நகராட்சி, வட்டார வளர்ச்சி, பேரூராட்சி அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அனைத்து கிராம  நிர்வாக அலுவலகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதியோர் உதவிதொகை, ரேஷன்கார்டு, அனைத்து விதமான சான்றுகள், குடிநீர் வசதி, சாலை வசதி, சாக்கடை வசதி, கழிப்பிட வசதி, வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் உட்பட அனைத்து விதமான கோரிக்கைகளுக்கும் மனுக்கள் அளித்து பயன் பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: