சம்பளம் வழங்காததை கண்டித்து பிஎஸ்என்எல் தொழிலாளர்கள் 28ம் தேதி குடும்பத்துடன் தர்ணா

ஈரோடு, ஆக.22: கடந்த 7 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் வரும் 28ம் தேதி குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்க ஈரோடு மாவட்ட முன்னாள் செயலாளர் பரமேஸ்வரன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 3 லட்சம் பேர் பணியாற்றி வந்தனர். பணி ஓய்வில் சென்றதாலும், புதிய நியமனம் இல்லாததாலும் தற்போது சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் நிரந்தர ஊழியர்கள் மட்டுமே உள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 8 கோடியே 75 லட்சமாக இருந்த தொலைபேசி இணைப்பு தற்போது 11 கோடியே 60 லட்சமாக உயர்ந்துள்ளது. துப்புரவு பணி துவங்கி அலுவலக பணி, சேவை மையங்களில் எழுத்தர் பணி, வாகன ஓட்டுநர், அலுவலக காவல் பணி, தொலைபேசி நிலையங்களில் பராமரிப்பு பணி, கேபிள் பராமரிப்பு பணி, லேண்ட்லைன் பராமரிப்பு என அனைத்து பணிகளும் ஒப்பந்த தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றனர்.

 நாடு முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தாரர்கள் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 477 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு கடந்த 7 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுதொடர்பாக பல கட்ட போராட்டம் நடத்தியும் இதுவரை சம்பள பாக்கி தொகையை வழங்கவில்லை.

ஒப்பந்தாரர்கள் தங்கள் பில் சமர்ப்பித்த பின்பும் டெல்லியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. டிசம்பர் மாதத்திற்கு பின், போதிய நிதி ஒதுக்கீடு செய்யாத காரணத்தினால் ஒப்பந்தாரர் பில் தேங்கி கிடக்கிறது. இதனால், ஒப்பந்தாரர்களால் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்க முடியவில்லை.

இதைக்கண்டித்து வரும் 28ம் தேதி ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் ஈரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: