×

சேலம் சுற்று வட்டார பகுதிகளில் குண்டுமல்லி விளைச்சல் அமோகம்

சேலம், ஆக.22: தொடர் மழை காரணமாக சேலம் சுற்று வட்டார பகுதிகளில் குண்டுமல்லி பூ அமோக விளைச்சலை தந்துள்ளது. இதன்காரணமாக விலை 100 ஆக சரிந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் பரவலாக குண்டுமல்லி, ஊசிமல்லி, கனகாம்பரம், அரளிப்பூ, காக்காட்டான், சம்பங்கி, சாமந்தி, ரோஸ், தாமரை உள்பட பல பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் பூக்கள் சேலம் வ.உ.சி., பூ மார்க்கெட் மற்றும் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டம் முழுவதும் பூக்கள் அமோக விளைச்சலை தந்துள்ளது. இதில் வழக்கத்ைதவிட குண்டுமல்லி பூவின் விளைச்சல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பூ மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.

இது குறித்து பூ விவசாயிகள் கூறுகையில், சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக குண்டுமல்லி சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக கோயில் பண்டிகை தவிர, முகூர்த்தங்கள் எதுவும் இல்லை. இதன் காரணமாக குண்டுமல்லி விலை உயராமல் சீராக இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் குண்டுமல்லி அமோக விளைச்சல் தந்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வழக்கமாக வரும் வரத்தில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ 100 என்று விலை சரிந்துள்ளது. எங்களிடம் பூ வாங்கிச்செல்லும் வியாபாரிகள் சற்று லாபம் வைத்து விற்று வருகின்றனர், என்றனர்.

Tags :
× RELATED கூலி தொழிலாளி சடலம் மீட்பு