×

ஏற்காட்டில் கடும் குளிர் சேலத்தில் 4வது நாளாக கனமழை

சேலம், ஆக.22: சேலத்தில் 4வது நாளாக நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகம் முழுவதும் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இருப்பினும் கடந்த ஒரு வாரமாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக, தினமும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் அதிகாலை வரை கனமழை கொட்டியது. இதனால், விவசாய நிலங்களில் உழவு பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். இதமான மழையால், மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 5.30 மணிக்கு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை கொட்டியது. மாநகர பகுதியில் டவுன், கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி என அனைத்து இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளிலும் வெள்ளம் போல், பெருக்கெடுத்து ஓடியது.

சுமார் 2 மணி நேரம் இடைவிடாது கனமழையாக கொட்டி தீர்த்தநிலையில், பிறகு சாரல் மழையாக நள்ளிரவு வரை நீடித்தது. இதேபோல், மாவட்டத்தில் வீரபாண்டி, இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, சங்ககிரி, ஓமலூர், ஆத்தூர், தலைவாசல், ஏற்காடு என பரவலாக நேற்றிரவு கனமழை கொட்டியது. பல்வேறு இடங்களில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்காட்டில் மழையின் காரணமாக கடும் குளிர் நிலவியது. இந்த பருவமழை தமிழகம் முழுவதும் இன்னும் 2 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags :
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு