சேலத்தில் முதல்வர் சுற்றுப்பயணம் பொதுமக்களிடம் இருந்து 18,348 மனுக்கள் பெற்றார்

சேலம், ஆக.22: சேலத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர்  எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் இருந்து 18,348 மனுக்களை பெற்றுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 18ம் தேதி சேலம் வந்தார். முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை துவக்கி வைத்த அவர், பொதுமக்களிடம் இருந்து 2 நாட்களாக மனுக்களை பெற்றார். முதல்நாள் சேலம் மாவட்டம் வனவாசி, எடப்பாடி, கொங்கணாபுரம் பகுதிகளிலும், நேற்றுமுன்தினம் தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி, ஏத்தாப்பூர் ஆகிய இடங்களிலும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். முதல்நாள் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களை அவரே பெற்றார்.

இந்நிலையில், மனுக்கள் கொடுக்க பொதுமக்கள் பலமணி நேரம் காத்திருப்பதை அறிந்த முதல்வர், எம்எல்ஏக்களை வைத்து மனுக்களை பெற்றார். அதன்படி எம்எல்ஏக்கள் செம்மலை, வெங்கடாசலம், வெற்றிவேல், மனோன்மணி, சித்ரா, சின்னதம்பி, மருதமுத்து, கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் ஆகியோரை பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெறவைத்தார். கடந்த 2 நாட்களில் மட்டும் 18,348 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று காலை 8.50 மணிக்கு ஈரோட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

Related Stories: