×

இளம்பிள்ளை அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

இளம்பிள்ளை, ஆக.22:  இளம்பிள்ளை அருகே, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதல்வரிடம் மனு அளித்த அடுத்த நாளே அளவீட்டு பணியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இளம்பிள்ளை அருகே கல்பாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சடையாண்டி ஊற்று பகுதியில், 20 ஏக்கர் பரப்பளவில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் சுத்திகரிப்பு நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது. இந்த 20 ஏக்கரில் ஏராளமான விவசாய நிலங்களும் அடங்கும். எனவே, இந்த திட்டத்தினை கைவிட கோரி விவசாயிகள் மனு அளித்தனர். இந்நிலையில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட உள்ள நிலத்தினை அளவீடு செய்ய, கல்பாரப்பட்டி விஏஓ பிருந்தா, பெரியசீரகாப்பாடி விஏஓ சங்கீதா, குடிநீர் வடிகால் வாரிய கோட்ட பொறியாளர் செங்கோடன் உள்ளிட்டோர் நேற்று சடையாண்டி ஊற்று பகுதிக்கு வந்தனர். இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களை நிலத்தை அளவீடு செய்ய விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், `எங்கள் நிலத்தில் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வருகிறோம். தற்போது, இங்கு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட திட்டமிட்டுள்ளனர். இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தோம். நேற்று நடந்த சிறப்பு குறைதீர் கூட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்தோம். ஆனால், மனு அளித்த அடுத்தநாளே அதிகாரிகள் நிலஅளவீடு செய்ய வந்துள்ளனர். குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட  அதிகாரிகள் வேறு இடத்தை தேர்வு செய்து, திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்,’ என்றனர்.

Tags :
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை