இடைப்பாடியில் விடிய, விடிய கனமழை வாழை, கரும்பு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்

இடைப்பாடி, ஆக.22: இடைப்பாடியில் நேற்று முன்தினம் விடிய, விடிய பெய்த கனமழையால் கரும்பு, சோளம் மற்றும் வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள கல்லபாளையம், வெள்ளரிவெள்ளி, புதுப்பட்டி, பூமணியூர், கோனேரிப்பட்டி, குள்ளம்பட்டி, பூலாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய,விடிய கனமழை  கொட்டி தீர்த்தது. இதனால் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது. மேலும் விவசாயிகள் பயிரிட்டிருந்த நிலக்கடலை, வாழை, பாக்கு, சாமந்தி ஆகியவை நீரில் மூழ்கியது. பல்வேறு இடங்களில் சோளத்தட்டு, மக்காச்சோளம், ஆலைக்கரும்பு அனைத்தும் சாய்ந்தது. இடைப்பாடி, மலங்காடு, மூலப்பாறை, கல்வடங்கம், கோனேரிப்பட்டி, பூலாம்பட்டி மற்றும் பல்வேறு இடங்களில் குட்டைகள், ஏரிகள் அனைத்தும் நிரம்பியது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியும், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

Advertising
Advertising

இது பற்றி விவசாயிகள் கூறுகையில், ‘இடைப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கிணறுகள், குளம், குட்டை மற்றும் வயல்களில் மழை நீர் தேங்கியும், நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு குறையும். மேலும், மண் ஈரப்பதம் நிலவி காணப்படுவதால் விவசாய பயிர்கள் நல்ல விளைச்சலை கொடுக்கும். ஆனாலும் இம்மழையால் இடைப்பாடி சுற்றியுள்ள விவசாய நிலங்களில் ₹20 லட்சத்திற்கும் மேற்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளது வருத்தம் அளிக்கிறது,’ என்றனர்.

Related Stories: